
தமிழகத்தில் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கம் மற்றும் நகர்ப்புற போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.புதிய கட்டட விதிகள் படி , தனி வீடுகளை கருத்தில் கொண்டு ஒரு முக்கிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்ட புதிய கட்டிட விதிகளின்படி, 3,300 சதுர அடி வரை மொத்த கட்டிடப் பரப்பு கொண்ட தனி வீடுகள் , இனி கட்டாயம் வாகனங்களை நிறுத்த தனியாக இடத்தை ஒதுக்க வேண்டும். இந்த இடம் இரண்டு கார்கள் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான அளவில் இருக்க வேண்டும்.இதேபோல் 3,300 சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பில் வீடுகள் கட்டப்பட்டால் அங்கு 4 கார்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு இடங்களை பார்க்கிங்கிற்கு விட வேண்டும் என்று விதிகள் மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன் அடுக்குமாடி குடியிருப்புகள் வணிக வளாகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான கட்டடங்கள் போன்றவைக்கு மட்டுமே வாகன நிறுத்துமிட விதிகள் கட்டாயமாக்கபட்டிருந்தது. ஆனால், தனி வீடுகள் மற்றும் தனி மனைகளில் கட்டப்படும் வீடுகளுக்கும் புதிய விதிகள் வந்து விட்டன. இதன் மூலம் ஒவ்வொரு புதிய வீட்டிலும் வாகன நிறுத்துமிடம் அமைக்க விதிகள் வகுக்கப்பட்டு விட்டது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளில், இணையதள சேவை மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளுக்கான கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.
நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் இடங்களை வாங்கி , இடத்தின் மொத்த பரப்பளவில் வீட்டை பெரிதாக கட்டி விட்டு , வாசலில் கார் பைக் நிறுத்த கூட இடம் இல்லாமல் சாலை ஓரத்தில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு ஏராளமான இடைஞ்சல்கள் ஏற்படுவதோடு போக்குவரத்து சாலையின் அளவும் குறைகிறது. ஒருவரை பார்த்து ஒருவர் என்று சாலைகளின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி அறிவிக்கப்படாத வாகன பார்க்கிங்காக சாலைகளை மாற்றி விட்டனர்.
இதனால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து சாலையின் அளவு குறையும் போது மேலும் விபத்துகளும் அதிகளவில் ஏற்படுகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் வீடு கட்டும் போது கட்டாயம் பார்க்கிங் வசதி மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான விதிகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
புதிய விதிகளினால் கிடைக்கும் பயன்கள்:
புதிய கட்டிட விதிகளின் படி வீட்டிற்கு உள்ளேயே பார்க்கிங் வசதி கிடைப்பதால் , வாகனங்கள் அனைத்தும் வீட்டிற்கு உள்ளேயே இருக்கும். இதனால் சாலைகளிலும் தெருக்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட மாட்டாது. இதனால் போக்குவரத்திற்கு எந்த ஒரு இடஞ்சலும் இருக்காது , சாலை நெரிசல்களும் பெருமளவில் குறைந்து விடும்.சாலையில் இடங்கள் அதிகமாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்படும்.
சாலைகளின் இரு ஓரங்களிலும் நடந்து செல்பவர்கள் இடைஞ்சல் இல்லாமல் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியும். வீட்டிற்கு உள்ளேயே வாகனங்கள் இருப்பதால் திருட்டு பயமும் குறையும். வாகனங்களும் சாலைகளின் தூசி ,மாசு ஆகியவற்றில் இருந்தும் பாதுகாப்பாக உள்ளே இருக்கும். இது நகரங்களின் ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.