
இந்திய மக்களின் தனிநபர் அடையாள அட்டைக்கு மிக முக்கிய ஆவணமாக ஆதார் அட்டைகள் திகழ்கின்றன. இன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கூட ஆதார் அட்டை முக்கியமாக கருதப்படுகிறது. அதற்கேற்ப பெற்றோர்களும் விழிப்புணர்வுடன் தங்கள் குழந்தைகளுக்கு ஆதார் அட்டையை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்கிறார்கள்.
குழந்தைகளைப் பொறுத்தவரை 5 வயதுக்குட்பட்டோருக்கு கருவிழி மற்றும் கைரேகை போன்றவை பதிவு செய்யப்படுவதில்லை. 5 வயதைக் கடந்த பிறகு தான் ஆதார் மையத்தால் பதிவு செய்யப்படும். இந்நிலையில் 5 வயதைக் கடந்த குழந்தைகள் தங்கள் ஆதார் அட்டைகளைப் புதுப்பிக்கத் தவறினால், அவை முடக்கப்பட வாய்ப்புள்ளது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து UIDAI வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, “பொதுவாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் கார்டு வேண்டுமென்றால் பெயர், வயது, பாலினம், முகவரி, புகைப்படம், மொபைல் எண் மற்றும் பிற ஆவணங்கள் தேவைப்படுகின்றன. இந்நேரத்தில் குழந்தைகளின் கருவிழி மற்றும் கைரேகைகள் பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால் குழந்தைகள் 5 வயதைக் கடந்த பிறகு, கருவிழி மற்றும் கைரேகையுடன் புகைப்படத்தையும் புதுப்பிக்க வேண்டும். இதனைத் தான் முதல் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு (MBU) என அழைக்கிறோம்.
குழந்தைகளின் 5 முதல் 7 வயது வரையிலான காலத்தில் ஆதார் புதுப்பிப்பை பெற்றோர்கள் மேற்கெள்ள வேண்டும். கொடுக்கப்பட்ட கெடுவிற்குள் ஆதாரை புதுப்பித்து விட்டால் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. 7 வயதைக் கடந்த பிறகு ரூ.100 கட்டணத்தைச் செலுத்தி ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம். குழந்தைகள் 7 வயதை தாண்டிய பிறகும் ஆதார் விவரங்கள் புதுப்பிக்கப்படவில்லை என்றால், அவர்களின் ஆதார் கார்டு முடக்கப்பட அதிக வாய்ப்புள்ளது” என UIDAI தெரிவித்துள்ளது.
குழந்தைகளின் ஆதார் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கக் கோரி குறுந்தகவல் ஒன்றையும் UIDAI அனுப்பியுள்ளது. இந்தக் குறுந்தகவல் கிடைக்கப்பெற்ற பெற்றோர்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தங்கள் குழந்தைகளின் ஆதார் விவரங்களை இ-சேவை மையங்களில் புதுப்பித்துக் கொள்ளுங்கள். ஒருவேளை ஆதார் கார்டு முடக்கப்பட்டு விட்டால், பிறகு மீண்டும் புதிதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.