

பழங்காலத்தில் கோசர்கள் என்னும் பழங்குடி இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்துர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்ற தற்போதைய பெயரைப் பெற்றது. பின்னர் சுருக்கமாக கோவை என நம்மால் அழைக்கப்படலாயிற்று.
1804 ஆம் ஆண்டு 1866ல் கோவை மாவட்டம் உருவானது. 01.05.1981 ஆம் ஆண்டு கோவை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கோவையின் தற்போதைய மொத்த மக்கள் தொகை 34,58,045 (2011ன் கணக்கெடுப்பின் படி) ஆகும்.இதில் 17,29,297ஆண்களும், 17,28,748 பெண்களும் அடங்குவர். தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோயம்புத்தூர் (வடக்கு), கோயம்புத்தூர் (தெற்கு) மற்றும் பொள்ளாச்சி என மூன்று வருவாய் மண்டலங்கள் உள்ளன.
கோவையின் முன்னேற்றத்திற்கு மிகவும் காரணமாக இருப்பது அதன் சாலை வசதி, விமானம், இரயில் போக்குவரத்து,குடிநீர்,மின்சாரம் போன்றவை ஆகும்.
இந்நிலையில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளின் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. 2023-ம் ஆண்டை ஒப்பிடும்போது 2024-ல் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் சர்வதேச பயணிகள் போக்குவரத்து 24% உயர்ந்துள்ளது. மேலும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, சர்வதேச விமானங்களை ஈர்க்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்’ என்று தொழில் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் கோவை விமான முனையத்தை தரம் உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.இதன் விளைவாக, தற்போதுள்ள விமான முனையத்தை அமைய இருக்கும் புதிய முனையம் 4 மடங்கு பெரியதாக விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.இச்செய்தியை சமீபத்தில் விமான நிலைய இயக்குனர் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதுள்ள18,000 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள கோவை முனையம் முதல் கட்டமாக 75,000 சதுர மீட்டர் அளவில் அதிகரிக்கப்படும்.அமைய இருக்கும் புதிய முனையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களுக்கான தனித்தனி புறப்பாடு பகுதிகள் பயன்பாட்டுக்கு வரும். விமானங்களை நிறுத்தி வைப்பதற்கு 14 ஏப்ரான்கள் நிறுவப்பட இருக்கின்றன. ஏப்ரான் என்பது விமானங்கள் நிறுத்துவது, பயணிகளையும், சரக்குகளையும் விமானத்தில் ஏற்றுவது ஆகியவற்றிற்கு பயன்படும் பகுதியாகும்.
இத்துடன் தற்போதுள்ள 2,990 மீட்டர் ஓடுபாதை 3,800 மீட்டராக அதிகரிக்கப்படும். விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகள் செப்டம்பர் 2026-க்குள் முடிவடைந்து விடும். விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான 627 ஏக்கர் நிலத்தில், 605 ஏக்கர் நிலத்தை மாநில அரசு விமான நிலைய நிர்வாகத்திடம் தற்போது ஒப்படைத்துள்ளது. இப்போது பெறப்பட்ட இந்த நிலத்தை சரிபார்க்கும் பணி நடைப்பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது இந்தியாவில் சுமார் 13 விமான நிலையங்களில் FTI-TTP வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.இத்திட்டத்தின் மூலம் பயணிகளின் கண்ணை ஸ்கேன் செய்து உடனடியாக கதவை திறந்து விடுகிறார்கள். அரசு படிப்படியாக FTI-TTP திட்டத்தை கோவை விமான முனையத்தில் அமல்படுத்தஇருப்பதாக்வும் அறியப்படுகிறது இதன் மூலம் கோயம்புத்தூர் விமான நிலையம் மேலும் நவீனமயமாக்கப்பட்டு பயணிகளுக்கு மேலும் பயனுள்ளதாக மாறும்.சிங்கப்பூர் வழியாக கோயம்புத்தூருக்கு திரும்பும்போது, குடிவரவு சோதனைக்கு 20 முதல் 30 நிமிடங்கள் ஆகிறது. குடிவரவு சோதனை நேரத்தை மேலும் குறைக்க நாமும் நவீன முறைகளை பயன்படுத்த வேண்டி யிருக்கிறது.
இவ்வசதிகள் அனைத்தும் கோவை விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில் கோவை விமான நிலையம் மேலும் பொலிவானதாகவும்,பயணிகளுக்கு மேலும் பல நவீன வசதிகளைக் கொண்டு வரும் என திடமாக நாம் நம்பலாம்.