

உக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபில் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. இப்பகுதியில் கிட்டத்தட்ட 700 நாய்கள் இருக்கின்றன. கடந்த 1986 ஆம் ஆண்டு இப்பகுதியில் இருந்த அணுமின் நிலையத்தில் விபத்து ஒன்று ஏற்பட்டது. அதன் பிறகு இப்பகுதியில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. ஆனால் மனிதர்கள் வளர்த்து வந்த நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகள் இங்கேயே இருந்தன. இந்நிலையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு இங்குள்ள 700 நாய்களும் நீல நிறமாக மாறியுள்ளன.
நாய்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், விலங்குகள் பராமரிப்பு குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செர்னோபில் பகுதியில் ஏற்பட்ட அணு உலை விபத்தால், இங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். கதிர்வீச்சின் தாக்கம் இங்கு அதிக அளவில் இருக்கும் என்பதால், உக்ரைன் நாட்டு அரசு இப்பகுதியை ‘செர்னோபில் விலக்கு மண்டலமாக’ அறிவித்தது.
கடந்த 30 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வந்த நாய்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. இருப்பினும் கடந்த 2017 ஆம் ஆண்டு, ‘டாக்ஸ் ஆப் செர்னோபில்’ எனும் அமைப்பின் துணை நிறுவனமான ‘கிளீன் பியூச்சர்ஸ் பண்டு’, நாய்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது.
கதிர்வீச்சு நிறைந்த பகுதியில் நாய்கள் எவ்வித குறையுமின்றி, இத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருப்பது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் தற்போது இங்குள்ள அனைத்து நாய்களும் நீல நிறமாக மாறி இருப்பது, விலங்குகள் பராமரிப்பு குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஒரு நாய் மட்டும் முழுவதுமாக நீல நிறத்திலேயே காட்சியளிக்கிறது.
இதற்கான உண்மையான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இருப்பினும் நாய்கள் ஏதேனும் ஒரு ரசாயனத்தில் விழுந்திருக்கலாம் எனவும், அதனால் தான் இவை நீல நிறமாக காட்சியளிக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாய்களுக்கு நீல நிறம் எப்படி வந்தது என்பதை சோதனை செய்ய ஆராய்ச்சியாளர்கள் முன்வந்துள்ளனர்.
சோதனையின் முடிவில் நாய்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, அவைகளுக்கு சிகிச்சை அளிப்பதே முதன்மை நோக்கமாக கருதப்படுகிறது.
நாய்களின் வெளிப்புறத் தோற்றம் நீல நிறமாக காணப்பட்டாலும், அவை எப்போதும் போலவே சுறுசுறுப்புடன் இருப்பதாக பராமரிப்பு குழு தெரிவித்துள்ளது. அதோடு நாய்களின் இயல்பான நடத்தையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அணு உலை விபத்தால் பரவிய கதிர்வீச்சால் நாய்கள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கதிர்வீச்சு தான் முக்கிய பிரச்சினை என்றால் நாய்கள் எப்போதோ பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தனை ஆண்டுகள் நாய்கள் நலமுடன் இருப்பதால், நாய்களின் நீல நிறத்திற்கு கதிர்வீச்சை காரணமாக கூற இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.