இமயமலை நாடான நேபாளம் ஹிந்து மதம் மற்றும் புத்த மதத்தின் ஆழமான வேர்களைக் கொண்டது. இங்குள்ள ஆன்மீக செயல்பாடுகள் , ஆழமான மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. தலைநகர் காட்மாண்டுவின் அருகில் உள்ள பள்ளத்தாக்கு கிராமங்களில் உள்ள புத்தர் பிறந்த சாக்கிய குலத்திலிருந்து, சிறு வயது பெண்கள் வாழும் தெய்வமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.அந்த சிறுமியை குமாரி என்று அழைக்கிறார்கள். அந்த சிறுமி ஹிந்துக்களாலும் புத்த மதத்தினராலும் வாழும் கடவுளாக வணங்கப்படுகிறார்.
இரண்டு வயதிலிருந்து நான்கு வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் வாழும் பெண் தெய்வமாக தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். இவர்கள் கரை படியாத தோல், கருமையான முடி , தெளிவான கண்கள் சேதமில்லாத பற்கள் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும் . அவர்கள் சிறுவயதில் இருந்தாலும் இருளை பார்த்து பயப்படக்கூடாது. இத்தகைய தேர்வுகளில் வெற்றி பெற்ற ஆர்யதாரா ஷாக்யா என்ற 2 வயது சிறுமி புதிய குமாரி கடவுளாக தேர்வானார்.
இனி அவருக்கு எப்போதும் சிவப்பு நிற உடைகள் மட்டும் அணிவிக்கப்படும். முடிகளை மேலே கட்டி நெற்றியில் , நெற்றிக் கண் வரையப்படும்.நேபாள மக்கள் வயது வித்தியாசமின்றி அந்த சிறுமியின் காலில் விழுந்து வணங்குவார்கள். இதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள்.மலர் மாலைகள் , காணிக்கைகள் எல்லாம் வழங்குவார்கள். புதிய குமாரியை நாட்டின் தலைவரும் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வது மரபாக உள்ளது.
வாழும் தெய்வமான குமாரி ஆர்யதாரா ஷாக்யாவை அவளது தந்தை சுமந்து கொண்டு வெளிய வர உறவினர்களும் , ஊர் காரர்களும் புடை சூழ வீட்டில் இருந்து புறப்பட்டாள். பின்னர் காத்மாண்டுவில் உள்ள கோயில் அரண்மனையான , குமாரி கர் நோக்கி ஊர்வலமாக மக்கள் அழைத்து சென்றனர். அங்கு நடைபெற்ற இந்திர ஜாத்ரா விழாவில், முன்னாள் குமாரிகளால் இழுக்கப்பட்ட தேரில் அமர வைக்கப்பட்ட புதிய குமரி ஊர்வலம் வந்தாள். இந்திரா ஜாத்ரா திருவிழா முடிந்து அங்கு தசைன் என்ற தசாராவும், திகார் என்ற தீபாவளியும் கொண்டாடப் படுகிறது.
நேபாளில் மதிப்புமிக்க இந்த பதவிக்கு சாக்கிய சமூகத்தில் இருந்து மட்டுமே சிறுமிகளை தேர்வு செய்கிறார்கள். சாக்கிய சமூகம் புத்தர் பிறந்த சமூகம் என்பதாலும் , இங்கு புத்த மதத்தினர் ஹிந்துக்களின் சமய சடங்குகளையும் பின்பற்றுவதால் , அவர்களும் குமாரியை வழிபட்டு ஆசி பெறுகின்றனர். குமாரி பிறந்த குடும்பத்தினருக்கு, சொந்த சமூகத்தினரால் அதிக மதிப்பு தரப்படுகிறது.
குமாரிகள் தனிமையான வாழ்க்கையை வாழ்கிறார்கள். திருவிழா காலங்களில் மட்டும் வெளியே செல்ல அனுமதிக்க படுகிறார்கள். சிறுவயது விளையாட்டுக்கள் எல்லாம் அவர்கள் அனுபவிக்கா விட்டாலும் , குமாரி அந்தஸ்து போன பின்னர் திருமணம் செய்து் கொள்ள அனுமதி உண்டு. ஆனாலும் நேபாள நாட்டுப்புறக் கதைகளின்படி, முன்னாள் குமாரியை மணக்கும் ஆண்கள் இளம் வயதிலேயே இறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. இதனால் பல முன்னாள் குமாரிகள் திருமணமாகாமல் இருக்கிறார்கள்.
தற்போது நேபாளிகளின் அணுகுமுறையில் மாற்றம் வந்துள்ளது. குமாரிகள் தற்போது கல்வி கற்றுக் கொள்கின்றனர். அரண்மனையில் பொழுது போக்கிற்காக தொலைக் காட்சியையும் வைத்துள்ளனர். குமாரிகள் பதவி காலம் முடிந்த பின்னர் அரசாங்கம் மாதம் தோறும் இந்திய மதிப்பில் ₹10 ஆயிரம் அளவிற்கு ஓய்வூதியம் வழங்குகிறது.