
பொதுவாக வங்கிகளில் காசோலைகளை டெபாசிட் செய்தால், வங்கிக் கணக்கிற்கு பணம் வருவதற்கு குறைந்தது 3 நாட்கள் ஆகும். ஆனால் விரைவான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வங்கிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இதன்படி நாளை (அக்டோபர் 4) முதல் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் காசோலைகளுக்கு அடுத்த சில மணி நேரங்களிலேயே தீர்வு காணப்பட உள்ளது.
பாதுகாப்பான மற்றும் விரைவான பணம் செலுத்தலுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புதுப்பிக்கப்பட்ட தீர்வு கட்டமைப்பையடுத்து, ஒரே நாளில் காசோலைகளுக்கு தீர்வு காணப்பட உள்ளது. இதன்படி எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ உள்ளிட்ட தனியார் வங்கிகள், அக்டோபர் 4 முதல் காசோலைகளுக்கு உடனடித் தீர்வை வழங்கவுள்ளன.
காசோலை விவரங்கள் தவறாக நிரப்பப்பட்டிருந்தால் அவை நிராகரிக்கப்படும். அதேபோல் காசோலை வழங்கியவரின் வங்கிக் கணக்கில் பணமில்லை என்றால் அது பவுன்ஸ் ஆகி விடும். காசோலைகள் நிராகரிப்பு மற்றும் பவுன்ஸ் ஆவதைத் தடுக்க அவற்றை மிகத் துல்லியமாக நிரப்ப வேண்டியது அவசியமாகும். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக நேர்மறை ஊதிய முறையைப் பின்பற்ற வேண்டும் என வங்கிகள் வலியுறுத்துகின்றன.
ரூ.50,000-க்கும் மேற்பட்ட காசோலைகளை வங்கியில் டெபாசிட் செய்வதற்கு முன்பு பயனாளி பெயர், தேதி மற்றும் தொகை உள்ளிட்ட காசோலை விவரங்களை சமர்ப்பிப்பது அவசியம். காசோலையை வங்கியில் டெபாசிட் செய்த பிறகு, ஏற்கனவே அளித்த விவரங்களை வங்கிகள் சரிபார்க்கும். இரண்டும் சரியாகப் பொருந்தினால மட்டுமே காசோலை உடனடியாக தீர்க்கப்படும். இல்லையென்றால் காசோலை நிராகரிக்கப்படும். காசோலையை தீர்க்கும் போது ஒரு ஒப்புகைச் செய்தி பயனாளிக்கு அனுப்பப்படும்.
இதற்கு வாடிக்கையாளர்கள் பிழையின்றி கவனமுடன் காசோலையை நிரப்ப வேண்டும். பயனாளி விவரங்கள் மற்றும் காசோலையின் மின்னணு படத்தை வங்கிக்கு அனுப்பும் செயலை காசோலை துண்டிப்பு அமைப்பு (CTS) செய்து வருகிறது. இது காசோலையை நேரடியாக மாற்ற வேண்டிய தேவையைத் தவிர்க்கிறது.
ரூ.5 இலட்சத்திற்கும் மேலான காசோலைகளுக்கு நேர்மறை ஊதியத்தை கட்டாயம் ஆக்கியுள்ளது ரிசர்வ் வங்கி. இதுதவிர ரூ.50,000-க்கு மேற்பட்ட காசோலைகளுக்கும் நேர்மறை ஊதியத்தைப் பரிந்துரைக்கிறது. காசோலை தீர்வுக்கான முதல் கட்டம் 2025 அக்டோபர் 4 முதல் தொடங்கும் எனவும், இரண்டாவது கட்டம் 2026 ஜனவரி 3 முதல் தொடங்கும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
வங்கிகளால் காசோலைகள் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க, காசோலை விவரங்கள் அனைத்தும் மிகத் துல்லியமாக இருப்பதை வாடிக்கையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். வார்த்தை மற்றும் எண்களில் எழுதும் போது பணத்தின் மதிப்பை சரியாக எழுத வேண்டும்; செல்லுபடியாகும் தேதி, பயனாளி பெயர் அல்லது தொகையின் மீது எந்த மேலெழுதலும் இருக்கவே கூடாது.
பணம் எடுப்பவரின் கையொப்பம், வங்கிப் பதிவுகளுடன் சரியாக பொருந்த வேண்டும். வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே காசோலையை ஒரே நாளில் தீர்க்க முடியும் என வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.