சமீபத்தில் சர்வதேச விண்வெளி மையத்தைச் சென்றடைந்த விண்வெளி வீரர்கள், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்ஸ்மோர் ஆகிய இருவரும் 2025ல் பூமிக்கு திரும்ப உள்ள நிலையில், நவம்பர் 5ம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்து வாக்களிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். நாசா ஏற்பாட்டில், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து ஆன்லைன் மூலம் இந்தத் தகவலை அவர்கள் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குரங்கு அம்மை நோய்க்கான முதல் தடுப்பூசியை, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த, 'பவாரியன் நார்டிக்' எனும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஊசியை, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தற்போது பயன்படுத்த வேண்டும். இரண்டு டோஸ்களாக இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் எதிரொலியாக சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் நடிக்கும் 69வது படத்தின் பெயர் இன்று 5 மணிக்கு அறிவிக்கப்படும் என கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம், அறிவித்துள்ளது. இதுவரை வேறு தென்னிந்திய மொழி படங்களையே தயாரித்து வெளியிட்ட கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம், முதன் முறையாக தமிழ் படத்தை தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் கடந்த 11ம் தேதி தொடங்கி, தற்போது நிறைவு பெற்றது. இதில் இந்தியா மொத்தம் 21 தங்கம், 22 வெள்ளி, 5 வெண்கலம் என 48 பதக்கங்களைக் கைப்பற்றி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.