செப்டம்பர் மாதத்தில் மட்டும் யூ.பி.ஐ. மூலம் நாள்தோறும் 50 கோடி முறை பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றதாக தேசிய கொடுப்பனவு கழகம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஐந்தாவது மாதமாக 20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இக்கழகம் தகவல் அளித்துள்ளது.
‘நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளது. இதயத்தில் இருந்து வெளியே செல்லும் இரத்தக்குழாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இன்னும் இரு நாட்களில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார். இரத்தக்குழாய் வீக்கத்திற்கான சிகிச்சைக்கு STENT பொருத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி ரஜினிகாந்திற்கு சிகிச்சை நல்ல முறையில் நடைபெற்றது’ என அப்பல்லோ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
‘தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை கூடுதலாகப் பதிவாக வாய்ப்பு உள்ளது’ என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதாவது வடகிழக்கு பருவ மழை இந்த ஆண்டு இயல்பை விட 112 சதவிகிதத்துக்கு கூடுதலாகப் பதிவாகக்கூடும். அக்டோபர் மாதத்தில் 115 சதவிகிதம் என்ற அளவில் இயல்பை விட அதிகமாக பருவமழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் சராசரியாக 45 செ.மீ. மழையும், சென்னையில் 78 செ.மீ. மழையும் பெய்வது இயல்பு என்றும் குறிப்பிட்டுள்ளது.
திரையரங்கில் 430 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள ‘GOAT’ திரைப்படம் நாளை மறுநாள் 3ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகும்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது பேட்டை வங்க தேச வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு அன்பின் அடையாளமாக பரிசளித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மிர்பூரில் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியோடு ஷகிப் அல் ஹசன் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு தனது பேட்டை பரிசளித்து இருக்கிறார் கிங் கோலி.