சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதத்தின் முதல் நாளன்று இந்தியாவில் வீட்டுப் பயன்பாடு மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், இன்று வெளியிட்ட தகவலின்படி, 19 கிலோ எடைகொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை 48 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் 1903 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டின் 2வது மற்றும் கடைசி சூரிய கிரகணம் நாளை அக்டோபர் 2ம் தேதி நிகழ உள்ளது. இது முழு சூரிய கிரகணமாக இருக்காது. எனினும், வளைய சூரிய கிரகணமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. சந்திரன், சூரியனை முழுமையாக மறைப்பதால், மறைக்கப்பட்ட பகுதியை சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றும் எனவும் அது பார்ப்பதற்கு நெருப்பு வளையம் போல காட்சியளிக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்திய நேரப்படி இரவு நேரத்தில் கிரகணம் ஏற்படுவதால், நாம் இதைக் காண முடியாதாம்.
மதுரை விமான நிலையம் இன்று முதல் 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவித்துள்ளது. அதனால், கோலாலம்பூர், மஸ்கட், ஷார்ஜா, சிங்கப்பூருக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரத்த ஓட்டம், செரிமானம் சீராக இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், இன்று அவருக்கு மருத்துவர்கள் ஆஞ்சியோ பரிசோதனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அதாவது இருதயத்துக்குச் செல்லும் இரத்த நாளங்களில் அடைப்பு இருந்ததால் இந்தப் பரிசோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ‘நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை நலமாக உள்ளது. அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’ என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த வருட இறுதியில் நடைபெறும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்க இருக்கிறார். இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்பதாகக் கூறப்படுகிறது. மீண்டும் சச்சின் டெண்டுல்கர் களமிறங்க இருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களின் மனதில் உற்சாகத்தையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.