இம்மாதம் 15 முதல் 20ம் தேதிக்குள் பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்பட உள்ளதாகவும், திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான இடம் மற்றும் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான இறங்கு தளம் உள்ளிட்டவற்றை தேர்வு செய்வதற்காக தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஷரத் ஸ்ரீ வஸ்தவா பாம்பனில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதோடு, பாம்பனில் உள்ள சில இடங்களை நேரடியாகப் பார்வையிட்டு ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்துள்ளார்.
மெரினா கடற்கரையில் நேற்று இந்திய விமானப்படையின் ‘வான்படை சாகச’ கண்காட்சி நடைபெற்றது. விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்த பொதுமக்களால் சென்னை சாலைகள் திக்குமுக்காடியது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றுக் கொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தாலும் வெயிலின் தாக்கத்தாலும் ‘வான்படை சாகச’ கண்காட்சி முடிந்தும் மக்கள் வீடு திரும்ப முடியமால், ஆங்காங்கே மயங்கும் நிலை ஏற்பட்டது. போதிய குடிநீர் கிடைக்காமல் திண்டாடினர். கூட்ட நெருக்கடியில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சோகமும் நடந்தேறியது. இந்நிலையில், இதுகுறித்து பலர் விமர்சனம் செய்து வந்தனர். ‘அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல், வேதனை நிகழ்வாக மாறிவிட்டது’ என விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் விமர்சனம் செய்துள்ளார். இது தவிர பொதுமக்களும், ‘அரசு மக்களை கவனிக்கத் தவறியது ஏன்? 5 பேர் உயிரிழப்பிற்கு யார் பொறுப்பு?’ எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில், 15 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலுார், சிவகங்கை மாவட்டங்களில் அதிகபட்சமாக, 13 செ.மீ., வரை மழை பதிவாகி உள்ளது. வங்கக்கடலில் ஆந்திர கரைக்கு அப்பால் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி சில நாட்களுக்கு முன் உருவானது. தற்போது, தெற்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களை ஒட்டிய, மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புதுச்சேரியில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 12 வரை இதே நிலை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.
ரஞ்சித், ரவீந்தர், சாச்சனா, பவித்ரா, தர்ஷிகா, தீபக், சத்யா உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் 8 வீட்டிற்குள் களமிறங்கியுள்ளனர். வீட்டிற்குள் வந்தவுடனே, வீட்டில் ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் இருந்துதான் போட்டியிடப் போகிறார்கள் என பிக் பாஸ் கூறிவிட்டார். அதற்கு ஏற்றாற்போல் வீட்டில் ஒரு பகுதியை பெண்களும், மற்றொரு பகுதியை ஆண்களும் பிரித்துக்கொண்டனர். நேற்றைய நிகழ்ச்சி முடிவுக்கு வந்த நேரத்தில், தொகுப்பாளர் விஜய் சேதுபதி, ‘இன்னும் 24 மணி நேரத்திற்குள் ஒரு எலிமினேஷன் இருக்கிறது’ எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார். இந்த நிலையில், ‘பிக் பாஸ் 8’ முதல் எலிமினேஷனாக,18 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கிய இளம் நடிகை சாச்சனா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய வங்கதேச அணி 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 11.5வது ஓவரிலேயே வெற்றிக்கான ரன்களை எடுத்து சாதனை படைத்தது. மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 132 ரன்கள் எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது.