டெல்லியில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் 5 லட்ச ரூபாய் வரையிலான இலவச சிகிச்சை வழங்கப்படும்’ என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம், நாடு முழுவதும் உள்ள 4.5 கோடி குடும்பங்களில் உள்ள ஆறு கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் இந்தியா பிரிவில், முக்கியப் பதவிகளில் உள்ள 200 பேரை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டி நிறுவனங்களின் விலை மலிவான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் வரவால், சாம்சங் பிராண்டின் செல்போன், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களின் விற்பனை சரிந்து லாபம் குறைந்து வருகிறது. எனவே, செலவுகளைக் குறைக்க ஊழியர்கள் 200 பேரை பணி நீக்கம் செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சென்னை ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் தொடர்ந்து 3வது நாளாக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10ம் தேதி பயணம் செய்வோர் ரயில் டிக்கெட்களை இன்று முன்பதிவு செய்யலாம். ஜனவரி 11ம் தேதி செல்வோர் நாளையும், ஜனவரி 12ம் தேதி பயணம் செய்வோர் நாளை மறுநாளும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலைய முன்பதிவு மையங்களிலும், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்ய முடியும். ஆனால், ஜனவரி 10ம் தேதிக்கான டிக்கெட்டுகள் தொடங்கிய மூன்றே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த 'தி கோட்' திரைப்படம் உலக முழுவதும் மொத்தமாக 300 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில், சென்னையில் மட்டுமே இப்படம் மொத்தமாக 11 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை நேரு விளையாட்டரங்கில் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் 29 ஆண்டுகளுக்குப் பிறகு களைகட்டி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு, நேபால் என 7 தெற்காசிய நாடுகளில் இருந்து 174 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டியில், ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், தமிழ்நாடு வீராங்கனை அபிநயா 11.72 வினாடியில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.