இரண்டு நாட்கள் பயணமாக வரும் 22ம் தேதி ரஷ்யா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ரஷ்ய அதிபர் புதினின் அழைப்பை ஏற்று பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் ரஷ்யா செல்லவிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
மதிய உணவு சாப்பிடுவதற்கு வழங்கும் கூப்பன்களை பயன்படுத்தி வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிய 24 ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய் சம்பளம் பெறும் ஊழியர்கள் சிலர், இந்த கூப்பன் மூலமாக பேஸ்ட், துணி பவுடர், மதுக் குவளைகளை வாங்குவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுமென புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் 23,000 பேருக்கு போனஸ் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பாகுபலி’ திரைப்படத்தின் 3ம் பாகத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டு வருவதாக ஞானவேல் ராஜா கூறியுள்ளார். மகேஷ் பாபு நடிக்க உள்ள ஒரு படத்தை முடித்த பிறகு ‘பாகுபலி’ 3ம் பாகத்தை உருவாக்கத் திட்டம் எனவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறி இருக்கிறார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில், ரச்சின் மற்றும் கான்வேயின் சிறப்பான ஆட்டத்தால் தனது முதல் இன்னிங்ஸில் 402 ரன்களைக் குவித்தது நியூசிலாந்து அணி. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகளை ஜடேஜா மற்றும் குல்தீப் வீழ்த்தினர்.