‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் நெரிசலைக் குறைக்கும் வகையில், 5 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்’ என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த வகையில், கன்னியாகுமரி - சென்னை, சென்னை - செங்கோட்டை, சென்னை - மங்களூர், தாம்பரம் - கன்னியாகுமரி, பெங்களூரு - கொச்சுவேலி அந்த்யோதயா ஆகிய 5 வழித்தடங்களில் அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் மாதம் 5ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு வீரரையும் ஸ்மார்ட் சோல்ஜராக மாற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக தளபதி உபேந்திர திவேதி அறிவித்துள்ளார். ஒவ்வொரு வீரரும் இனி தங்களுக்கென தனி டிரோன்களுடன் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என,ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த நவம்பர் மாதம் 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'கங்குவா.' 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாக இருக்கும் இப்படத்தில் AI தொழில் நுட்பம் மூலம் அனைத்து மொழிகளிலும் சூர்யாவின் வாய்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 26ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், நடிகர் சூர்யா, "இயக்குநர் சிவா விஷுவலாக சிறப்பான படங்களை எடுக்கும் திறமை கொண்டவர். ‘கங்குவா’ படத்தை தொடர்ந்து 170 நாட்கள் அவர் எடுத்தார். மிகவும் கடினமான பல செயல்பாடுகளை இந்த படப்பிடிப்பின்போது படக்குழுவினர் மேற்கொண்டனர். இந்த படத்திற்கான லவ் ரசிகர்களிடம் இருந்து திரும்பவும் தனக்கு படத்தின் வெற்றியாக கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது" என கூறியுள்ளார்.
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், சீனாவின் வாங் ஜின்யு உடன் மோதினார். இதில் சோபியா கெனின் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை மறுதினம் நடைபெறும் 2வது சுற்றில் டென்மார்க்கின் கிளாரா டாசன் உடன் இவர் விளையாட உள்ளார்.