வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஜோபைடனை சந்தித்து, போருக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆலோசனை நடத்தியுள்ளார். அது மட்டுமின்றி, ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் இவர் நன்றியும் தெரிவித்துள்ளார். ஒரு பக்கம் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ரஷ்யா ஆலோசனை செய்து வருகிறது. மற்றொரு பக்கம் அமெரிக்காவுடன் சேர்ந்து உக்ரைன் ஆலோசித்து வருகிறது. அதாவது, போரை வலுக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் மூண்டு வருகின்றன.
இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் வரும் அக்டோபர் 6ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை வான் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக இந்திய விமானப்படை துணைத் தளபதி பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தில் அனைத்து வகுப்புக்கும் காலாண்டுத் தேர்வு இன்று நிறைவு பெறுகிறது. அதனால் நாளை முதல் விடுமுறை விடப்பட்டு, அக்டோபர் 7ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்க இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவர் முதல் முறையாக அட்டகத்தி தினேஷ் உடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘லப்பர் பந்து.’ இப்படத்தை அறிமுக இயக்குநரான தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். செப்டம்பர் 20ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம், இந்த ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மேலும் 7 நாட்களில் உலகளவில் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்குக் கிடைத்துள்ள மாபெரும் வசூலாக திரை வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் தொடங்குகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே சென்னையில் நடைபெற்ற முதலாவது டேஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், கான்பூரில் நடைபெறும் இந்த இரண்டாவது கிரிக்கெட் போட்டியின்போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.