

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல்கள் உள்ள நாடாக இந்தியா இருக்கிறது. மிக அதிக அளவில் வாகனங்களும் இங்கு தான் பயன்படுத்தப்பட்டது வருகின்றன. இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் தரவுகளின் படி , ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும் லட்சக்கணக்கானோர் சாலை விபத்துகளில் உயிர் இழக்கின்றனர். மற்ற நாடுகளை விட இந்த விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது. நாட்டின் அதிக அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதில் சாலை விபத்துகள் முதன்மையாக இருக்கின்றன.
தேசிய மற்றும் பிராந்திய அரசுகள் இந்த விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கு, ஏராளமான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர். இதன் மூலம் ஓரளவிற்கு விபத்துகளை கட்டுப்படுத்தியுள்ளனர், மேலும் முந்தைய காலங்களை விட தற்போது அதிக விழிப்புணர்வு , வாகன ஓட்டிகளிடமும் ஏற்பட்டுள்ளது. தேசத்தின் பெரும்பாலான சாலைகள் மாநில அரசு கட்டுப்பாட்டில் இருந்தாலும், தேசிய நெடுஞ்சாலைகளில் தான் அதிக அளவில் விபத்து நடைபெறுகிறது
அதிக வாகன பயன்பாடு, அதிவேகம் , திடீரென்று ஓட்டுநர் ஏற்படுத்தும் சிறு பிழை, கவனக்குறைவு, மது அருந்திவிட்டு ஓட்டுதல் , சாலைகளில் திடீரென்று ஏற்படும் சிறு பள்ளங்கள் ஆகியவை அதிகளவில் சாலை விபத்துகளுக்கு காரணமாக இருக்கின்றன. பெரும்பாலும் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழக்க மருத்துவ சிகிச்சையில் ஏற்படும் தாமதமே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
விபத்துகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கே ஏராளமான நேர விரயம் ஏற்படுவதால், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் முன்னரே பலியாகி விடுகின்றனர். சில நேரங்களில் அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்புள்ள பொன்னான நேரத்துக்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதில்லை. இது போன்ற காரணங்களை ஆய்வு செய்த ,இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தற்போது அதிரடியான ஒரு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அவசரகால மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில் கேர் சிஸ்டம் மூலமாக, விபத்து மேலாண்மை அமைப்பை சீர் செய்ய புதிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது.
•விபத்து பற்றிய தகவல் கிடைத்த 10 நிமிடங்களுக்குள், 10 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அமைந்துள்ள விபத்து நடந்துள்ள இடத்திற்கு ஆம்புலன்ஸ் உடனடியாக சென்றடைய வேண்டும். அதில் தாமதப்படுத்தினால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு ₹10,000 அபராதம் விதிக்கப்படும். 10 கிமீ தூரத்தை தாண்டி இருப்பவர்களுக்கு அதற்கேற்ற நேரமும் நிர்ணயிக்கப்படும்.
•அடுத்ததாக, விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை தகவல் கிடைத்த நேரத்திலிருந்து 1 ஒரு மணி நேரத்திற்குள், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். இந்த நேரத்தை தவறவிட்டாலும் ஆம்புலன்ஸ் நிர்வாகத்திற்கு ₹10,000 அபராதம் விதிக்கப்படும்.
•அவசரகால அழைப்புகளை ஆம்புலன்ஸ் சேவை மையம் நிராகரித்ததால், மிக கடுமையான அபராதம், அந்த மையத்திற்கு விதிக்கப்படும்.
•ஆம்புலன்ஸ் வாகனங்களில் உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அவசரகால பணியாளர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
•இந்த விதிமுறைகளை முழுமையாக செயல்படுத்த ஏஐஎஸ்-140 (AIS-140) தரநிலைக் கொண்ட ஜிபிஎஸ் (GPS) கருவிகள் , அனைத்து ஆம்புலன்ஸ்கள், ரோந்து வாகனங்கள் , கிரேன் ஆகியவற்றில் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் ஐஓடி(IoT) சிம் வசதியுடன் கூடிய பிரத்யேக ஆண்ட்ராய்டு சாதனங்களும் வாகன அதிக கண்காணிப்பிற்காக ஓட்டுநர்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் IMS Care டேஷ்போர்டு மூலமாகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் மட்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 50,000கிமீ தொலைவுள்ள சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பயணிகளின் உயிரைக் காக்க 3000 ஆம்புலன்ஸ்கள், 1000 ரோந்து வாகனங்கள் மற்றும் கிரேன்கள் தயாராக உள்ளது. அவசர கால உதவிக்கு 1033 என்ற கட்டணமில்லா சேவை எண்களை அழைக்கலாம்.