வாகனங்களின் கண்ணாடியில் முறையாக ஒட்டப்படாமல், கைகளில் எடுத்துச் சென்று சுங்கச்சாவடிகளில் காண்பிக்கப்படும் FASTag-கள் இனிமேல் Blacklist-ல் சேர்க்கப்படும் என NHAI எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மாத தொடக்கத்தில், சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள், பாலங்கள் மற்றும் உயர்த்தப்பட்ட சாலைகள் போன்ற குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலைப் பிரிவுகளில் சுங்கக் கட்டணம் 50% வரை குறைக்கப்பட்டது. இந்த மாற்றங்கள், 2008 ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் (National Highway Fee Rules, 2008) சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களின் ஒரு பகுதியாகும்.
இதனையடுத்து தற்போது மேலும் ஒரு விதியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அமல்படுத்தியுள்ளது. அதவாது இனி கையில் Fasttag களை வைத்திருக்கக்கூடாது. வாகனத்தின் கண்ணாடியிம் மட்டுமே ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
இந்த புதிய விதிமுறை, FASTag முறையின் நோக்கத்தையும், சுங்கச்சாவடிகளில் வாகனப் போக்குவரத்தை விரைவுபடுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
FASTag என்பது மின்னணு சுங்கக் கட்டண வசூல் முறையாகும். இது வாகனங்களின் கண்ணாடியில் ஒட்டப்பட்டு, சுங்கச்சாவடிகளை கடக்கும்போது தானாகவே கட்டணத்தைப் பிடித்தம் செய்யும். இதனால் வாகனங்கள் நிற்காமல் செல்ல முடியும், பயண நேரம் குறைவதோடு, எரிபொருள் சேமிப்பும் சாத்தியமாகும்.
ஆனால், சில வாகன ஓட்டிகள், FASTag-ஐ வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டாமல், தேவைப்படும்போது கைகளில் எடுத்துச் சென்று காண்பிப்பதாகக் கூறப்படுகிறது. ஆகையால் ஒரே FASTag-ஐ பல வாகனங்களுக்குப் பயன்படுத்த முயற்சிப்பது அல்லது தவறான பயன்பாடுகளைத் தவிர்ப்பதற்காகவே இந்த விதி கொண்டுவரப்பட்டுள்ளது.
NHAI வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தகைய செயல்கள் FASTag முறையின் முழுமையான செயல்பாட்டிற்கு இடையூறாக இருப்பதாகவும், சுங்கச்சாவடிகளில் தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் செயல்பாடு FASTag விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், இத்தகைய FASTag-கள் உடனடியாக கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட FASTag-கள் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்த முடியாது, மேலும் வாகன ஓட்டிகள் இரட்டிப்பு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
வாகன ஓட்டிகள் தங்கள் FASTag-களை வாகனத்தின் கண்ணாடியில் முறையாகவும், பாதுகாப்பாகவும் ஒட்ட வேண்டும் என NHAI அறிவுறுத்தியுள்ளது. இந்த புதிய நடவடிக்கை, சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைக்கவும், பயணிகளுக்கு விரைவான மற்றும் தடையற்ற பயணத்தை வழங்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் இந்த புதிய விதிமுறையை முறையாகப் பின்பற்றி, தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதேபோல் உங்கள் ஃபாஸ்டேக் பழுதடைந்தாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ, மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். அதற்கு, உங்கள் வங்கி அல்லது ஃபாஸ்டேக் வழங்கும் நிறுவனத்தை அணுகலாம்.