

இந்தியாவில் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான ஹோண்டா ஜப்பானை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு வாகன உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஜெட் விமானங்கள் மற்றும் பிற இயந்திரங்களை உற்பத்தி செய்கிறது. ஹோண்டா தனது தலைமையகத்தை டோக்கியோ, டோரானோமோனில் வைத்துள்ளது. கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்வதில் மிகவும் பிரபலமான ஹோண்டா, அதன் தயாரிப்புகள் அனைத்தும் உயர்தரமாகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் இருப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது. அந்த வகையில் ஹோண்டா 1986-ல், அக்யூரா என்ற ஆடம்பர பிராண்டை அறிமுகப்படுத்திய முதல் ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் ஆகும்.
அமெரிக்காவில் உள்ள ஹோண்டா நிறுவனத்தின் ‘சிவிக்’ கார்கள் விற்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அந்த மாடல் கார்களில் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக வாகனம் நகரும் போது சக்கரங்கள் (அலுமினிய அலாய் வீல்கள்) கழன்று விழும் அபாயம் இருப்பதாக புகார் எழுந்தது.
இதன்பேரில் விபத்து அபாயத்தை அதிகரிக்கக்கூடிய பிரச்சினை காரணமாக அமெரிக்காவில் விற்பனையான 4 லட்சம் (தோராயமாக 406,290) கார்களை திரும்ப பெறுவதாக ஹோண்டா அறிவித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட கார்கள், 18 அங்குல அலுமினிய அலாய் வீல்களைக் கொண்ட சில மாடல் கார்கள் 2016-2021 ஆண்டு வரையில் விற்கப்பட்ட சிவிக் கார்கள் என்று தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் பிரேக் பெடல் பிரச்சனை தொடர்பான சில ஹோண்டா பைலட் மாடல் (Honda Pilot model) கார்களை ஹோண்டா நிறுவனம் திரும்ப பெற்ற நிலையில் தற்போது சிவிக் மாடல் கார்களில் சக்கர பிரச்சனை காரணமாக திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இந்த மாடல் காரில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் தங்கள் கார்களை இலவச ஆய்வுக்காக அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் எடுத்துச் செல்லுமாறு இந்த நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. மேலும் ஹோண்டா டீலர்கள் திரும்பப் பெறப்பட்ட வாகனங்களின் சக்கரங்களை ஆய்வு செய்வார்கள் என்றும் தேவைப்பட்டால் உரிமையாளர்களுக்கு எந்த செலவும் இல்லாமல் ஹப்கள் மற்றும் சக்கரங்களை மாற்றுவார்கள் என்று NHTSA தெரிவித்துள்ளது.
அதேசமயம் கார் சக்கரங்களில் ஏற்பட்ட பழுதினால் விபத்து போன்ற எந்த விதமான அசம்பாவிதங்களும் இதுவரை நடக்கவில்லை என்றும் ஹோண்டா தெரிவித்துள்ளது.