மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் படைபலத்துடன் அரசைக் கைப்பற்றியதாக இராணுவம் அறிவித்துள்ளதை, ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்துள்ளது. இதுவரை அந்நாட்டுக்கு வழங்கிவந்த நிதியுதவிகளை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது.
நைஜீரிய அதிபர் முகமது பசௌமை கடந்த புதன்கிழமை இராணுவம் பிடித்து வைத்துக்கொண்டது. அதையடுத்து வெள்ளியன்று அரசு அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றிவிட்டதாகவும் தளபதி அப்தொர்ரகுமான் சியானியே அரசுத் தலைவர் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதற்கு மேற்குலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.
குறிப்பாக, அமெரிக்காவும் பிரான்சும் கடுமையாக கண்டித்தன. நைஜீரியாவில் ஜனநாயக செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு வராவிட்டால், அமெரிக்கா அளித்து வரும் பல நூறு கோடி டாலர் உதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்தது. இராணுவத்தால் தூக்கி எறியப்பட்ட அதிபர் பசௌமுக்கு அமெரிக்கா உறுதியான ஆதரவு தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க அரசு விவகாரத் துறைச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தொலைபேசி மூலம் பசௌமுடன் தொடர்பு கொண்டார். தாங்கள் நைஜீரியாவில் அரசியல்சாசனத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டிய வேலைகளைச் செய்வோம் என்று உறுதி கொடுத்தார்.
அப்போது, நைஜீரியாவில் மட்டுமல்ல மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பாதுகாப்பைக் கொண்டுவர பசௌமின் பங்களிப்பு பாராட்டுக்கு உரியது என்று பிளிங்கன் குறிப்பிட்டார்.
முன்னதாக, கடந்த வாரம் பேசிய பசௌம், அமெரிக்காவின் ஆதரவு நைஜீரியாவின் ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள் சட்டத்தின் ஆட்சிக்குக் கொடுக்கும் மரியாதையைச் சார்ந்தது என்று கூறியிருந்தார். அடுத்த ஒரு வாரத்தில் அவருக்கு ஆதரவாக அமெரிக்கா இப்படி பேச நேரிட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 1960ஆம் ஆண்டில் விடுதலை அடைந்த இந்த நாடு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அமைதி வழியாக ஆட்சியதிகாரம் பெற்றது. ஆனால் அப்போதே பசௌம் பதவியேற்பதற்கு சில நாள்களுக்கு முன்னர் இதே இராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற முயன்றது. அதையடுத்து அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளின் படையினரும் அங்கு நிலைகொண்டு வருகின்றனர். மொத்தம் 2 ஆயிரம் மேற்கு நாடுகளைச் சேர்ந்த இராணுவத்தினர் அங்கு பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், மேற்கு நாடுகளின் ஆதரவாளனரான அதிபர் பசௌமை விரட்டிவிட்டு, அரசைக் கைப்பற்றியுள்ளது, தளபதி சியானியின் தலைமையிலான இராணுவம். அரசுத் தொலைக்காட்சியில் தோன்றிப் பேசிய அவர், நாடு படிப்படியாகவும் தவிர்க்கமுடியாதபடி சாகடிப்பதைத் தடுக்கவே தாங்கள் அரசைக் கைப்பற்றியதாகக் குறிப்பிட்டார்.
நைஜீரிய அரசுக் கலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆப்பிரிக்க ஒன்றியமும் 15 நாள்களுக்குள் படைகள் தம் தளத்துக்குத் திரும்பவேண்டும் என்றும் நாட்டின் அரசியல்சாசனப்படியான செயல்பாடுகள் திரும்பவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.