#BIG NEWS : பரபரக்கும் அரசியல் களம்..! முதல்வர் ஸ்டாலினின் சவாலுக்கு மத்திய அமைச்சரின் ஆதாரத்துடன் கூடிய பதில்...!!

STALIN - Nirmala seetharaman
STALIN - Nirmala seetharamansource:aajtak
Updated on

தமிழகத்தில் நெருங்கி வரும்  சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் அரசியல் தலைவர்களின்  பரப்புரைகள், கட்சியினரின் எதிர் விவாதங்கள் என வார்த்தைப் போர் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில்  தஞ்சாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கும் நெல் சாகுபடி ஊக்கத்தொகையை நிறுத்தச் சொல்லி மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளதாக பாஜக அரசு மீது கடுமையாக விமர்சனம் செய்தார்.. இது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் செயல் என்றும் மத்திய அரசின் தடையையும் மீறி, தமிழக அரசு நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ₹3,500 ஆக உயர்த்தி வழங்கும் என்று அவர் அதிரடியாக அறிவித்து பாஜகவை சாடினார்.

தமிழகம் முழுவதும் இருக்கும் பெருவாரியான விவசாயிகளின் வாக்குகளைத் தீர்மானிக்கும் இந்த நெல் சாகுபடிக்கான ஊக்கத்தொகை பிரச்சனை தற்போது இரு அரசுகளுக்கு இடையிலான நேரடிப் போராக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நெல்சாகுபடி ஊக்கத்தொகை நிறுத்தம்  விவசாயிகளுக்குச் செய்யும் துரோகம் என்ற ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு ஆதாரத்துடன் பதில் அளித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நெல்லுக்கு ஊக்கத் தொகையை நிறுத்த வேண்டும் என மத்திய அரசு கடிதம் எழுதியதாக மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதை மறுத்து நிர்மலா சீதாராமன் அந்தக் கடிதத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

ஊக்கத்தொகை வழங்கும் தமிழக அரசு கொள்கையால் நெல் உற்பத்தி அளவுக்கு அதிகமாக நடைபெறுகிறது . நெல் உற்பத்தியில் விவசாயிகள் கவனம் செலுத்துவதால் எண்ணெய் வித்துக்கள் தானிய உற்பத்தி குறைவாக உள்ளது. நெல்லுக்கு பதில் எண்ணெய் வித்துக்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினால் பாமாயில் இறக்குமதி சுமை குறையும். நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை பரிசீலிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுகிறோம் என மத்திய அரசு கடிதத்தில் எழுதியிருந்ததாகவும் நிர்மலா சீதாராமன் முதல்வர் ஸ்டாலினின் சவாலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

முதலமைச்சர் மு க ஸ்டாலினின் சவாலை ஏற்று  நெல்லுக்கு ஊக்கத்தொகை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளது விவசாயிகளிடையே மட்டுமின்றி அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடக்கும் நெல் அரசியலில் மக்கள் யார் பக்கம் என்பது இன்னும் சில தினங்களில் தெரியும்.

இதையும் படியுங்கள்:
நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!
STALIN - Nirmala seetharaman
logo
Kalki Online
kalkionline.com