ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவராகிறார் நிதிஷ்குமார்?

Nitish Kumar as President of United Janata Dal?
Nitish Kumar as President of United Janata Dal?https://tamil.oneindia.com

க்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜீவ் ரஞ்சன் என்கிற லல்லன் சிங்கை நீக்க பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான முடிவு வருகிற 29ம் தேதி தில்லியில் நடைபெற உள்ள கட்சியின் தேசிய நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவராக  நிதிஷ்குமாரே இருக்க முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய தலைவர் லல்லன் சிங்கை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கினால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை தலைவராக நியமித்தால் அது கட்சிக்குள் பிரச்னையை உருவாக்கலாம் என்பதால் தலைவர் பதவியை நிதிஷ்குமாரே ஏற்க வேண்டும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் வற்புறுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.

தற்போது லல்லன் சிங் செயல்பட்டுவரும் விதம் நிதிஷ்குமாருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுடன் நெருக்கம் காட்டி வருவதாகச் சொல்லப்படுகிறது.

2024 மக்களவைத் தேர்தலில் லல்லன் சிங், முங்கர் தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டிருப்பதாகவும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் டிக்கெட்டில் அவர் அந்தத் தொகுதியில் போட்டியிடலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி கட்சிகளுடன் லல்லன் சிங் ஒருங்கிணைந்து செயல்படாததால் அவர் மீது நிதிஷ்குமார் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி கூட்டத்தில் ஜனவரிக்குள் தொகுதி பங்கீடுகளை இறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
பிரதமர் வேட்பாளராக கார்கே பெயர் பரிந்துரை: கோபத்தில் நிதிஷ்குமார்!
Nitish Kumar as President of United Janata Dal?

இது தொடர்பாக எதிர்க்கட்சி கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சஞ்சய் குமார் ஜா கூறுகையில், தொகுதிப் பங்கீடுகளை ஜனவரிக்குள் இறுதி செய்ய வேண்டும், பொது செயல்திட்டத்தை விரைவில் இறுதி செய்ய வேண்டும். மக்களவைக்கு தேர்தல் நெருங்கி வருவதால் அப்போதுதான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வசதியாக இருக்கும் என்று கூட்டத்தில் நிதிஷ்குமார் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

எனினும், இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியின் அமைப்பாளராக தமது பெயரை அறிவிக்காததால் நிதிஷ்குமார் அதிருப்தியில் உள்ளதாகவும், அதனால்தான் தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் செய்தியாளர்கள் கூட்டத்தை அவர் தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படும் செய்திகளை சஞ்சய் ஜா மறுத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com