வாரிசு அரசியல், லாலு மீது காட்டம்! மீண்டும் தடம் மாறுகிறாரா நிதிஷ்குமார்?

Nithish kumar With PM Modi
Nithish kumar With PM Modi

க்கள் நாயகன் என்று அழைக்கப்படும் மறைந்த சோஷலிஸ்ட் தலைவரும், பிகார் முன்னாள் முதல்வருமான கர்பூரி தாகுரின் 100-வது பிறந்தநாளை நாடு கொண்டாடி வருகிறது. இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் மோடி அரசு மறைந்த தலைவருக்கு நாட்டின் உயரிய விருதான  “பாரத ரத்னா” விருதை அறிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த அரசியல் தலைவருக்கும் இந்த விருது வழங்கப்படாத நிலையில், திடீரென மத்திய அரசு கர்பூரி தாகுரை கெளரவப்படுத்தியுள்ளது எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்பூரி தாகுருக்கு மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்காக மோடி அரசை பிகார் முதல்வர் நிதிஷ்குமார் வெகுவாக பாராட்டியுள்ளார். அதேநேரத்தில் லாலுவின் பெயரை குறிப்பிடாமல் வாரிசு அரசியல் மீது தாக்குதல் தொடுத்துள்ளார். கர்பூரி தாகுர், தமது குடும்பத்தை ஒருபோதும் அரசியலில் ஊக்குவிக்கவில்லை. ஆனால், இங்கு பலர் தொடர்ந்து அரசியலில் தங்கள் வாரிசுகளை நுழைத்து வருகிறார்கள் என்று நிதிஷ் காட்டமாக கூறியுள்ளார்.

ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரான நிதிஷ்குமார், கர்ப்பூரி தாகுருக்கும் பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று நீண்டநாட்களாக வலியுறுத்தி வந்தவன் நான். ஆனால், எனது முயற்சிகளை அங்கீகரிக்காமல் பிரதமர் மோடி, தாகுருக்கு விருது அறிவித்துள்ளார். அதனால் பரவாயில்லை.

கர்ப்பூரி தாகுரின் சமூக நீதி கோட்பாட்டை அடுத்துதான் பிகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதை நாடு முழுவதும் செயல்படுத்தவேண்டும். இந்திய வரலாற்றில் முதல் முறையாக அவர், 1978 ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை கொண்டுவந்தார். இப்போது இந்த இடஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பலர் இன்னும் வறிய நிலையிலேயே உள்ளனர் என்றார் நிதிஷ்குமார்.

வாரிசு அரசியல் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் லாலு கட்சியை மறைமுகமாக தாக்கிப் பேசியதுடன் பிரதமர் மோடியை நிதிஷ்குமார் புகழ்ந்து பேசியதைப் பார்க்கும்போது அவர் எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருந்து விலக விரும்புவது போல் தெரிகிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மியும், மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. பிகார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி, ஜனவரி 25 ஆம் தேதிக்குப் பிறகு அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று கூறிவருகிறார்.

இதையும் படியுங்கள்:
சிங்கப்பூர் சலூன் விமர்சனம்!
Nithish kumar With PM Modi

ஒருவேளை நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் முடிவை எடுத்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, லாலு தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சிக்கும் பின்னடைவாகவே இருக்கும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நிதிஷ்-மோடி ஜோடியை மக்களவைத் தேர்தலில் தோல்வி அடையச் செய்வது என்பது கடினமான பணியாகவே இருக்கும் என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com