‘நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்று இல்லை’ என்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, பிரதமர் மோடியின் தலைமைக்கு சவால் விடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பவார் இவ்வாறு பதிலளித்தார்.
"தற்போதைக்கு, நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்று இல்லை. இதுபோன்ற முடிவு ஒன்று அல்லது இரண்டு விஷயங்களில் மட்டுமல்ல, பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது" என்றும் பவார் கூறி இருக்கிறார்.
ஊடகவியலாளர்களிடம், “நீங்கள் நிறைய பிரசாரம் செய்கிறீர்கள். ஆனால், நாட்டின் நலன்களை யார் பாதுகாப்பார்கள்? நாடு யாருடைய கைகளில் பாதுகாப்பாகவும் வலுவாகவும் இருக்கும்? சர்வதேச அரங்கில் நாட்டின் மதிப்பை உயர்த்துவது யார்? போன்ற கேள்விகளுக்கு இந்தக் காரணிகள் மிகவும் முக்கியம்” என்று அப்போது பவார் கூறினார்.
"சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை நாங்கள் பார்த்தோம். தேர்தலுக்கு முன் சொல்லப்படும் கருத்துக் கணிப்பு முடிவுகள் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூறமுடியாது" என்றும் அவர் கூறினார்.
இந்த மூன்று மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. மாநில அரசுக்கு எதிராக புனே மாவட்டத்தில் எதிர்க்கட்சிகள் பேரணிகளை நடத்துவது குறித்த கேள்விக்கு, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த (என்.சி.பி.) மக்களவை எம்.பி. ஒருவர் பதவி விலக விருப்பம் தெரிவித்ததாக பவார் கூறினார்.
“2019ல் நாங்கள் அவருக்கு டிக்கெட் கொடுத்தபோது, அவர் சாம்பாஜி மகாராஜ் (தொலைக்காட்சி சீரியலில்) நடித்ததால் பிரபலமானார். மேலும், அவர் ஒரு நல்ல பேச்சாளராக இருந்தார்" என்று அஜித்பவார், ஷிரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் அமோல் கோல்ஹேவை சுட்டிக்காட்டினார். இவர் சரத் பவார் தலைமையிலான என்சிபி முகாமை ஆதரிப்பவர்.
“நான் அவருக்கு 2024 மக்களவை தேர்தலில் மாற்று ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளேன். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்பதை நான் இப்போதே உங்களுக்குச் சொல்ல முடியும்” என்று அஜித் பவார் கூறினார். கடந்த ஜூலை மாதம் அஜித்பவார், மற்றும் 8 எம்.எல்.ஏ.க்கள் சரத் பவாரிடமிருந்து பிரிந்து சென்று மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக - சிவசேனை (ஷிண்டே பிரிவு) கூட்டணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.