ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பு!
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்ற பிறகு, ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்தது. இதனால் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெற்ற நாணயக் கொள்கைக் குழுவின் முடிவுகளை சஞ்சய் மல்ஹோத்ரா இன்று வெளியிட்டார்.
நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே ரெப்போ வட்டி விகிதத்தில் 100 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்ட நிலையில், இம்முறை ரெப்போ விகிதம் நிலையாகவே இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். அதற்கேற்ப ரெப்போ விகிதம் மாற்றமின்றி 5.5% என்ற அளவிலேயே தொடரும் என சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த நாணயக் கொள்கைக் கூட்டத்தின் போது 50 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டன. இதனால் இம்முறையும் ரெப்போ விகிதம் 0.25% குறையும் என சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் ரெப்போ விகிதம் மாற்றமின்றி அதே நிலையில் தொடரும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தியன் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவில் 3 ரிசர்வ் வங்கி உறுப்பினர்கள் மற்றும் 3 வெளி உறுப்பினர்கள் என மொத்தம் 6 பேர் உள்ளனர். இந்தக் குழு தான் இந்தியப் பொருளாதாரம் சார்ந்த பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற 11 கூட்டங்களுக்குப் பிறகு நடப்பாண்டு பிப்ரவரியில் தான் ரெப்போ விகிதம் முதன்முறையாக 0.25% குறைக்கப்பட்டு 6.25% ஆக மாறியது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்திலும் 0.25% குறைக்கப்பட்டு 6.0% ஆக ரெப்போ விகிதம் குறைந்தது. யாருமே எதிர்பார்க்காத வகையில் கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற நாணயக் கொள்கைக் கூட்டத்தின் போது ரெப்போ விகிதம் மேலும் 0.5% குறைக்கப்பட்டு 5.5% ஆக குறைந்தது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை வீட்டுக் கடன் வாங்கியவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெற்ற நாணயக் கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ விகிதம் மாற்றிமின்றி 5.5% ஆகவே இருக்கிறது.
ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்ற பின் நடக்கும் 4வது நாணயக் கொள்கைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய 3 கூட்டங்களில் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டது இந்தியப் பொருளாதாரத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் பணவீக்கம் குறைந்திருப்பதால், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை குறைத்து வருகிறது.