
தமிழக அரசு வேலைகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இன்று நற்செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. இதன்படி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கிராம ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 1,450 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் உள்ள காலிப் பணியிட விவரங்களை ஆன்லைன் வழியாகவும் ஊராட்சி ஒன்றியங்களின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.
கிராம ஊராட்சி செயலர் காலி பணியிடங்களுக்கு தேர்வு இல்லை என்பதால் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டந்தோறும் தனித்தனியாக கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று முதல் https://tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் முதல் வாரத்தில் கிராம ஊராட்சி செயலர் பணிக்கான நேர்காணல் நடத்தப்பட இருக்கிறது. மேலும் டிசம்பர் மாதத்தின் இறுதியிலேயே தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
சம்பள விகிதம்: ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை.
வயது வரம்பு:
01-07-2025 அன்றைய தேதிப்படி பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 31 வயது வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 18 முதல் 37 வயது வரையும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரை சேர்ந்தவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்கள் வழங்கப்படும்.
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அதோடு எட்டாம் வகுப்பு வரை தமிழில் ஒரு பாடமாக கொண்டு படித்திருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.100 மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.50-ம் தேர்வுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09-11-2025.
நேர்காணல் நடைபெறும் தேதி: 04-12-2025 முதல் 12-12-2025 வரை.
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் முடிவுகள் வெளியிடப்படும்.
பணி நியமன ஆணை வழங்கப்படும் தேதி: 17-12-2025.