

காங்கிரஸ் கட்சிக்கு நல்லநேரம் வந்துவிட்டது. கருத்துக் கணிப்புக்கே வேலையில்லை என்று உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனையின் தலைவ்களில் ஒருவரான சஞ்சய் ரெளத் தெரிவித்தார்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிஜோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.
அதற்கு முன்னதாக நவம்பர் 30 ஆம் தேதி ஐந்து மாநில தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ்-பா.ஜ.க. இடையே இழுபறி நிலை நீடிக்கிறது. மிஜோரத்தில் உள்ளூர் கட்சிகளுக்கே வெற்றி வாய்ப்பு. சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உத்தவ் தாக்கரே சிவசேனை கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ரெளத், காங்கிரஸின் தேர்தல் வெற்றி இந்தியா எதிர்க்கட்சி கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகும். காங்கிரஸ் கட்சிக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. தேர்தல் கருத்துக்கணிப்பு தேவையில்லை. காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு காரணம் முழுக்க முழுக்க ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கேதான் என்றும் சஞ்சய் ரெளத் கூறினார்.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தேர்தல் கருத்துக் கணிப்பில் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கடும் போட்டி நிலவுகிறது. அங்கு இழுபறி நிலை நீடிப்பதாகவே சொல்லப்படுகிறது.
தொழிலதிபரும் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வாத்ரா கூறுகையில், தேர்தல் கருத்துக் கணிப்பை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெல்வதற்கு வாய்ப்பு உள்ளது. நான் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறேன் என்றார். மத்தியப் பிரதேசத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்.
எனவே அங்கு காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைப்பது உறுதி என்று அவர் மேலும் கூறினார்.மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத், தேர்தல் கருத்துக் கணிப்புகளை நிராகரிப்பதாக தெரிவித்தார். நாடு ஒரு தெளிவான கண்ணோட்டத்துடன் செல்கிறது. டெலிவிஷனை நம்பிச் செல்லவில்லை என்றார்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். நிச்சயம் அதற்கேற்ற பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர். டிசம்பர் 3 ஆம் தேதி இது உறுதிப்படுத்தப்படும் என்றார் கமல்நாத்.