

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருசக்கர வாகன விபத்துக்களால் உயிர்பலி அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலோனார் முறையாக ஹெல்மெட் அணியாமல் செல்வதால் உயிரை பறிகொடுக்கும் நிலை ஏற்படுகிறது. இதையடுத்து இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை வலியுறுத்தும் வகையில் போலீசார் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனாலும் பலரும் ஹெல்மெட் அணிவதை தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சித்தூர், திருப்பதி ஆகிய மாவட்டங்களில் காவல்துறை சார்பில் ‘ஹெல்மெட் அணியவில்லையெனில் பெட்ரோல் இல்லை’ (நோ ஹெல்மெட் நோ பெட்ரோல்) என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. திருப்பதி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் சுமார் 500 இருசக்கர வாகன ஓட்டிகள் பலியாகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். ஹெல்மெட் அணிந்திருந்தால் பலரின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்.
விபத்துகளை குறைப்பதற்கும், விபத்தில் ஏற்படும் உயிரிழப்பை தடுப்பதற்கும் விரிவான விழிப்புணர்வு திட்டம் தேவை. அதன் ஒரு பகுதியாக தான் திருப்பதியில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அந்தத் திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பெட்ரோல் நிலையங்களிலும் ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது. இருசக்கர வாகன ஓட்டிகளும், அதன் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வந்தால் தான் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் ஸ்ரீகாளஹஸ்தி பகுதியிலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வந்தால் தான் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. ஹெல்மெட் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல் வழங்காமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர். பொதுமக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனவே பொதுமக்கள் தங்களின் சுய பொறுப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் அலட்சியம் காட்டினால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
இருசக்கர வாகனங்களை ஓட்டும் இளைஞர்களிடையே ஹெல்மெட் பயன்பாட்டை அதிகரிக்க இது ஒரு நல்ல நடைமுறையாகும். விபத்துகளை தடுக்க ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பெண்கள், குடும்ப உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்கின்றனர். இளைஞர்கள் பொறுப்போடு செயல்பட்டு தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள வேண்டும்.
எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் ‘நோ ஹெல்மெட்-நோ பெட்ரோல்’ திட்ட விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வந்தால் தான் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் வழங்குவோம். இல்லையெனில், பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என்று பெட்ரோல் பங்க் உரிமையளார்கள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் உயிர் மதிப்புமிக்கது, உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள், ஹெல்மெட் அணியுங்கள், பொறுப்போடு வாகனம் ஓட்டுங்கள், உங்கள் வாழ்க்கையை நீங்கள் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.