அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை - குந்தவை த்ரிஷா!

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை - குந்தவை த்ரிஷா!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. கல்கி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத் தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் பச்சனும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வானதியாக சோபிதாவும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லஷ்மியும் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை நுங்கம்பாக்கத்தில் இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, நடிகைகள் த்ரிஷா, ஐஷ்வர்யா லட்சுமி, ஷோபிதா உட்பட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களின் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்தார் இயக்குனர் மணிரத்தினம்.

இந்த சந்திப்பில் பொன்னியின் செல்வன் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி , நடிகைகள் த்ரிஷா, ஐஷ்வர்யா லட்சுமி, ஷோபிதா ஆகியோரிடமும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

நேற்றைய நிகழ்வில் நடிகர் விக்ரம் அவர்களின் பிறந்தநாளுக்காக பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.அப்போது பேசிய நடிகர் விக்ரம், “பொன்னியின் செல்வன் 2 படத்தில், எல்லோருக்கும் பிடித்த அனைத்து விஷயங்களும் இருக்கு. கண்டிப்பாக இரண்டாம் பாகம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். மணி சார் முழுமையாக உற்சாகமாக இருந்தார். சந்தோசமாக படத்தை எடுத்தார். மணி சார் படத்தில் வருவது வால் நட்சத்திரம் போல அதிசயம். இது ஒரு காவியம். மணி சாரின் படத்தில் நடிக்கும் போது நம்மை அறியாத நிறைய விசயங்கள் இருக்கும். மணி சார் நடித்து காட்டவே மாட்டார். இந்த படம் நிறைய ரீச் ஆக மணி சாரின் ஊக்கம் தான் காரணம்.

தமிழ் தெரியாத நண்பர்கள் கூட படம் நன்றாக இருப்பதாக சொன்னார்கள். அது பொன்னியின் செல்வன் படத்தில் தான் நிகழ்ந்தது. நிறைய விஷயங்கள் உள்ளது. குந்தவை, வந்தியத்தேவன் காதல் என்ன ஆனது என்பதைப் பற்றியும், ஆதித்ய கரிகாலன் என்ன ஆனார் என்பது பற்றியும் எனக்கே தெரியாது . அது சஸ்பென்ஸ் ..” என்று தெரிவித்தார்.

பொன்னியின் செல்வன் 2 தொடர்பாக தஞ்சாவூரில் ஏன் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை என்கிற முக்கிய கேள்விக்கு பதிலளித்த நடிகர் கார்த்தி, “ பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் விழாவே தஞ்சாவூர் கோயில் அருகே நடத்த வேண்டும் என்பதுதான் திட்டம். ஆனால் அப்போது அங்கு மூன்றாவது கொரோனா அலை வந்தது. ஆகையால் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சியை அங்கே நடத்துவது ஆபத்து என எச்சரித்து அனுமதி கொடுக்க வில்லை.

முதலிலேயே அது தவறிவிட்டதால், சென்னையிலேயே நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தினோம் . அதனால்தான் அங்கு விழா எடுக்க முடியாமல் போனது. இந்த முறை கண்டிப்பாக அங்கு விழா எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். எங்களுக்கும் அது குறித்தான ஆசை இருக்கிறது.” என்று பேசினார்.

குந்தவை கதாபாத்திரம் படத்தில் நன்றாகவே அரசியல் செய்யும். நீங்களும் பிரமாதமாகவே நடித்துள்ளீர்கள் ஆகையால் வரும் காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா? என்ற கேள்வி குந்தவை த்ரிஷாவிடம் கேட்டனர்

இதற்கு பதிலளித்த த்ரிஷா, “ எனக்கு அரசியல் ஆசை சத்தியமாக இல்லை. கேமரா முன்னால் சென்றாலே நடிப்பு மட்டும் வரும். இயக்குனர் சொல்லியதை தான் அப்டியே நடித்தேன் . அதனால் அரசியலில் நான் வருவது தொடர்பான சிந்தனைகளே என்னிடம் இல்லை.” என்றார். மேலும் அவரிடம் குந்தவை கதாபாத்திரம் குறித்து கேட்டதற்கு " குந்தவை கதாபாத்திரதிற்கு இவ்வளவு ரீச் கிடைக்கும் என நிச்சயம் எதிர்பார்க்கவேயில்லை என சந்தோஷப் பட்டார்.

நடிகர் ஜெயம் ரவி பேசிய போது , “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பொன்னியின் செல்வனை, எந்த அளவுக்கு நாங்கள் கஷ்டப்பட்டு மக்களிடம் கொண்டு சேர்த்தோமோ அது போல மீடியாவும் பொறுப்புடன் மக்களிடம் கொண்டு சேர்த்தனர். நிறைய கஷ்டப்பட்டு உள்ளோம். சாதாரண கஷ்டம் இல்லை. 10 படத்துக்கான கஷ்டம் அது. நீங்கள் டீச்சர் மாதிரி சரியான விமர்சனம் கொடுக்கிறீர்கள். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் நன்றாக வந்துள்ளது. நிச்சயமாக படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என நினைக்கிறேன். இதை உலகம் முழுவதும் சென்று சேரும் ” என்று தெரிவித்தார்.

அதன் பிறகு பேசிய , பூங்குழலி ஐஸ்வர்யா லட்சுமி , “எனக்கு ஸ்கூல் நியாபகம் வந்தது. ஐஸ்வர்யா லட்சுமி என்று பெயர் வைத்ததால் முதலில் என்னை தான் அழைப்பார்கள். அதுபோல இப்போது பூங்குழலி என அழைக்கிறார்கள் . பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2ல் படத்தில் இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது . பூங்குழலி கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது ” என்று தெரிவித்தார்.

இந்த படத்தில் அருள் மொழி வர்மனுக்கு யார் ஜோடி? சோபிதாவா , ஐஸ்வர்யா லஷ்மியா? என கேட்டதற்கு ... படத்தை பார்த்து தெரிந்த கொள்ளுங்கள் என சஸ்பென்ஸ் வைத்தனர் வானதி சோபிதாவும் , பூங்குழலி ஐஸ்வர்யா லஷ்மியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com