
இந்தியாவில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமாக அனைவராலும் அறியப்படுவது டாடா கன்சல்டன்சி நிறுவனம் (டிசிஎஸ்). ஐடி ஊழியர்கள் டிசிஎஸ் வேலையை அரசு வேலை போல் கருதும் நிலையில் அந்த நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 12,200 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து அதிர்ச்சி அளித்தது. புதிய தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இடைநிலை மற்றும் மூத்த நிலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தான் இந்த பணி நீக்க நடவடிக்கையில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
டிசிஎஸ்-இன் இந்த அறிவிப்பால் கலக்கம் அடைந்த ஐடி ஊழியர்கள் மத்தியில் மற்ற நிறுவனங்களும் இதேபோல் ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிடுமோ என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.
டாடா கன்சல்டன்சிக்கு போட்டி நிறுவனமான இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான கருதப்படுவது இன்போசிஸ் நிறுவனமாகும். இந்த சூழலில் இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதன்படி தங்களுடைய நிறுவனம் ஊழியர்களை பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபடாது என்று அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலில் பரேக் திட்டவட்டமாக தெரிவித்து இருப்பது ஊழியர்கள் இடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்டு முழுவதும் இன்போசிஸ் நிறுவனம் கூடுதலாக 20,000 புதியவர்களை (கல்லூரி பட்டதாரிகள்) வேலைவாய்ப்பு எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், பணிநீக்கத்திற்கு அவசியமில்லை என்று சலில் பரேக் கூறியதாக எக்கனாமிக் டைம்ஸ் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்போசிஸ் ஒரு ஊழியருக்கு வருவாய் திறனை மேம்படுத்தியுள்ளது என்றும், அதை தொடர்ந்து மேம்படுத்தும் என்றும் கூறிய சலீல் பரேக், வளர்ச்சியை ஆதரிக்கும் ஆட்சேர்ப்பை நாங்கள் தொடருவோம் என்று கூறினார்.
மேலும் இன்போசிஸ் நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்திற்கு படிப்படியாக மாறி வருவதாக கூறிய அவர், ஆட்டோமேஷன் போன்றவற்றின் வருகையால் நிறுவனத்திற்கும் அதில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெளிவு படுத்தினார்.
தங்களது நிறுவனத்திற்குள் ஏஐ பயன்பாடு இருந்தாலும் முக்கியமான பணிகளை மனிதர்கள் தான் மேற்கொள்ள வேண்டியதாக உள்ளது என்றும், மனிதர்களின் வேலையை மேம்படுத்தும் கருவியாகவே ஏஐ பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது ஐடி துறையில் நடைபெற்று வரும் பணிநீக்க நடவடிக்கை என்பது ஒரு கட்டமைப்பு ரீதியான மாற்றமே தவிர ஐடி துறை வீழ்ச்சி அடையவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ள சலில் பரேக், ஏஐ பயன்பாடு காரணமாக இன்போசிஸ் நிறுவனத்தின் உற்பத்தி திறன் 5 லிருந்து 15% வரை உயர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
2025 ஜூன் 30, உடன் முடிவடைந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 8.7 சதவீதம் உயர்ந்து ரூ.6,921 கோடியாக உயர்ந்துள்ளதாக ஜூலை 28-ம்தேதி அறிவிக்கப்பட்டது. இது, எதிர்பார்த்ததை விட அதிகமாகும். நிதியாண்டின் முதல் காலாண்டில் வருவாய் 7.5 சதவீதம் அதிகரித்து ரூ.42,279 கோடியாக உள்ளது.