

2021 சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (CPS) ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) திமுக அரசு இன்னும் அமல்படுத்தவில்லை. இந்தத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு முன்னோடியாக இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் நடைபெறவுள்ளது.
திமுகவின் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண் 309-ன் படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பணிக் கொடை வழங்க வேண்டும்,, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணி ஒன்றை நடத்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் இன்று முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில்தான், இன்று விடுமுறை எடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் எச்சரித்துள்ளார். இன்று தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதியில்லை என்றும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலகத் துறைகள், அனைத்துத் துறைத் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இன்று அரசு ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு தவிர வேறு எந்த விதமான விடுப்புக்கும் அனுமதியில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அரசு ஊழியர்களில் நடத்தை விதிகளை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு ஊழியர்களில் யாராவது அலுவலகத்திற்கு வரவில்லை என்றால், அவர்கள் விடுப்பு எடுத்ததாக கருதப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
மேலும், பகுதி நேர ஊழியர்கள், தினசரி ஊதியம் மற்றும் ஒருங்கிணைந்த ஊதியம் பெறுபவர்கள், விடுப்பு எடுத்தால் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
யாரேனும் பணிக்கு வராமல் விதிகளை மீறி இருந்தால் அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் ஊழியர்களின் வருகைப் பதிவு குறித்த அறிக்கையை காலை 10.15 மணிக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.