வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் அதில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ( மினிமம் பேலன்ஸ் ) பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின்படி, அவ்வாறு குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காவிட்டால் வங்கிகள் கட்டணம் விதிக்கின்றன. அந்த கட்டணங்களை நாம் கட்டாயமாக செலுத்தியே ஆகவேண்டும்.
இந்நிலையில், இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), தனது வங்கியிலுள்ள சேமிப்பு கணக்குகளுக்கு (SB-Public) குறைந்தபட்ச சராசரி இருப்பை (MAB)பராமரிக்காததற்காக விதிக்கப்படும் அபராத கட்டணங்களை தள்ளுபடி செய்வதை அறிவித்திருக்கிறது. இந்த நடைமுறை அக்டோபர் 1-ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வருவதாக தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை அறிவித்துள்ளது.
செப்டம்பர் 30-ம்தேதி வரையிலான கால அளவிற்கு ஏதேனும் குறையக்கூடிய தொகைக்கான கட்டணங்கள் ஏற்கனவே இருந்துவரும் விதிகளின் படி விதிக்கப்படுவது தொடரும் என்றும் அறிவித்துள்ளது. வங்கியின் இந்த முடிவானது, வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது.
சாமானிய, வசதியற்ற மக்களுக்கு வங்கி செயல்பாடுகளிலான அனுபவத்தை இந்த முடிவு மேலும் எளிதாக்கும். குறிப்பாக PMJDY, BSBDA, சிறிய கணக்குகள், ஐஓபி சேமிப்பு கணக்கு ஊதிய தொகுப்பு, ஐஓபி சிக்ஸ்டி பிளஸ், ஐஓபி சேமிப்பு கணக்கு ஓய்வுதாரர் திட்டம் மற்றும் ஐஓபி அரசு கணக்கு ஆகியவற்றில் குறைந்தபட்ச இருப்புநிலையை பராமரிக்காததற்கான கட்டணங்களை இவ்வங்கி ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயலாக்க அதிகாரியுமான அஜய் குமார் ஶ்ரீவஸ்தவா கூறுகையில், ‘எனது வங்கியின் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்குகின்ற இந்த தள்ளுபடி திட்டத்தை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். வாடிக்கையாளர் நலன் மற்றும் நிதி உள்ளடக்கம் மீது எனது அர்ப்பணிப்பை இந்த முடிவு பிரதிபலிக்கிறது. வங்கி சேவைகளை பெறுவதையும், பயன்படுத்துவதையும் அதிக வசதியானதாகவும் மற்றும் சிரமமற்ற இனிய அனுபவமாகவும் எனது வாடிக்கையாளர்களுக்கு ஆக்குவதே எனது இலக்காகும்’ என்றும் தெரிவித்துள்ளார்.
SB-MAX, SB-HNI, SB பிரைம், SB பிரியாரிட்டி, SB பிரிவிலேஜ், NRI எலவேட், NRI பிரிவிலேஜ் NRI சிக்னேச்சர் ஆகியவை உட்பட பிரீமியம் சேமிப்பு கணக்கு திட்டங்களை பொறுத்தவரை குறைந்தபட்ச இருப்புநிலை பராமரிக்கப்படாத நேர்வுகளில் விதிக்கப்படும் அபராத கட்டணங்கள் மாற்றமின்றி அப்படியே தொடர்ந்து இருக்கும் என்றும் ஐஓபி தெரிவித்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(IOB) திரு.எம்.சிடி.எம். சிதம்பரம் செட்டியார் அவர்களால் பிப்ரவிரி 10, 1937 அன்று நிறுவப்பட்டது.
1969-ல் IOB தேசியமயமாக்கப்பட்டு, இந்திய அரசின் கீழ் உள்ள முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக ஆனது. இந்த வங்கி, தமிழ்நாடு மாநிலத்தில் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் (SLBC) ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளது மற்றும் 15 மாவட்டங்களில் முன்னணி வங்கி பொறுப்பையும் கொண்டுள்ளது.
தற்போது இந்தியா முழுவதும் 3345 கிளைகளையும் சுமார் 3461 ஏடிஎம்களையும் ஐஓபி நிர்வகித்து வருகிறது. ஜூன் 30, 2025 அன்று முடிவடைந்த காலாண்டில் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.5,93,213 கோடியாகவும், செயல்பாட்டு லாபம் ரூ.2,358 கோடியாகவும், நிகர லாபம் ரூ.1,111 கோடியாகவும் இருந்தது.
1937-ம் ஆண்டு பிப்ரவிரி 10-ம் தேதி திரு.எம்.சிடி.எம். சிதம்பரம் செட்டியார் அவர்களால் தொடங்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(IOB), 1969-ல் தேசியமயமாக்கப்பட்டு, இந்திய அரசின் கீழ் உள்ள முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக மாறியது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தற்போது இந்தியா முழுவதும் 3345 கிளைகளையும் சுமார் 3461 ஏடிஎம்களையும் நிர்வகித்து வருகிறது. கடந்த் ஜூன் 30-ம்தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.5,93,213 கோடியாகவும், செயல்பாட்டு லாபம் ரூ.2,358 கோடியாகவும், நிகர லாபம் ரூ.1,111 கோடியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.