மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு வங்கி லாக்கர்களைப் பயன்படுத்துவது வாடிக்கையாளர்களின் வழக்கம். ஒரு குறிப்பிட்ட கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் சேவையை வங்கிகள் வழங்கி வருகின்றன. வங்கி லாக்கர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கடந்த 2022 இல் சில விதிகளைக் கொண்டு வந்தது ரிசர்வ் வங்கி.
இந்நிலையில் தற்போது மீண்டும் வங்கி லாக்கர் தொடர்பான விதிகளை கடுமையாக்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்குச் சொந்தமான மதிப்பு மிக்க பொருட்களின் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்படும்.
1. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைப்படி, லாக்கர் அறைக்கு 24 மணி நேர சிசிடிவி கேமரா பொருத்தப்படும். இந்த கேமராவில் பதிவாகும் வீடியோக்களை 180 நாட்கள் வரை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.
2. இனி வங்கி லாக்கரைத் திறக்க வாடிக்கையாளர்களின் கருவிழிகள் அல்லது கைரகை கட்டாயமாகும். ஒவ்வொரு முறை லாக்கரைத் திறக்கும் போதும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்பப்படும்.
3. வாடிக்கையாளருடன் லாக்கர் தொடர்பான ஒரு ஒப்பந்தத்தை வங்கிகள் ஏற்படுத்திக் கொள்ள டிசம்பர் 2025 வரை காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது ரிசர்வ் வங்கி. இந்த ஒப்பந்தத்தில் யார் யாருக்கு என்ன பங்கு என்பதைத் தெளிவாக குறிப்பிட வேண்டும். புதிய விதிகளின் படி ஒப்பந்தம் செய்து கொள்ள ஸ்டாம்ப் பேப்பரை வங்கிகளே வழங்க வேண்டும்.
4. இதற்கு முன்புவரை லாக்கரில் உள்ள பொருட்கள் காணாமல் போனால், அதற்கு வங்கிகள் பொறுப்பேற்காது. ஆனால் புதிய விதிகளின்படி காணாமல் போகும் பொருட்களுக்கு லாக்கருக்கான ஆண்டுக் கட்டணத்தில் 100 மடங்கு நஷ்ட ஈட்டை வங்கிகள் வழங்க வேண்டும். அதாவது ஒருவர் லாக்கருக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.2,500 செலுத்தினால், நஷ்ட ஈடாக ரூ.2,50,000-ஐ பெறுவார். இயற்கை சீற்றங்களினால் வங்கி லாக்கருக்கு பாதிப்பு நேர்ந்தால் மட்டுமே வங்கிகள் நஷ்ட ஈடு கொடுக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
5. லாக்கர் உரிமையாளர் திடீரென இறந்து விட்டால், நாமினியாக நியமிக்கப்பட்டவர் 15 நாட்களுக்குள் உரிய ஆவணங்களை வங்கியில் செலுத்தி லாக்கரைத் திறக்கலாம்.
6. லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம் என்பது குறித்த விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி ஆயுதங்கள், வெடி பொருட்கள், ரொக்கப் பணம் மற்றும் போதைப் பொருட்களை லாக்கரில் வைக்கக் கூடாது. மீறினால் வங்கியுடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும். அதோடு சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும்.
வங்கி லாக்கர் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள், லாக்கரை சரியான காரணங்களுக்காகப் பயன்படுத்துவதை உறுதி செய்யும். அதோடு லாக்கரின் பாதுகாப்பும் அதிகரிக்கும். வங்கி லாக்கர் விதிமுறைகள் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.