

இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகி , தேர்தலில் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நிர்வாகங்கள் வந்துள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் ஜனநாயக திருவிழாவான தேர்தலுக்கு அரசியல்வாதிகளும் பொதுமக்களும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு கூட்டணிகளும் , தங்களுடன் கூட்டு வைத்துள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடுகளை வழங்குவதில் மும்முரமாக உள்ளன. அதன் பின்னர் கூட்டணியில் யார் யாருக்கு என்னென்ன தொகுதிகளை வழங்குவது? போன்றசெயல்முறைகளும் தொடங்கி உள்ளது.
தேர்தல் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் தினங்களுக்கு முன்னால் இருந்தே , தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகள் அடிக்கடி வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு தேர்தல் கருத்துக்கணிப்புகளும் தற்போது நியாயமான முறையில் நடத்தப்படுவது இல்லை. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தங்கள் சார்ந்த கட்சிகளுக்கு ஆதரவாக முடிவுகளை கூறுவதாக இருக்கின்றன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பலமுறை தேர்தலில் முடிவுகளுக்கு எதிர் மாறாக இருந்துள்ளன. மேலும் கருத்துக்கணிப்புகள் என்பது ஒட்டுமொத்த மக்களின் மனநிலையை தீர்மானிப்பதாக இருப்பது இல்லை. ஒரு சில நேரங்களில் மட்டும் கருத்துக்கணிப்புகள் சரியாக இருந்துள்ளன.
பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பொதுவாக வாக்காளர்களின் மனநிலையை திசை திருப்பும் நடவடிக்கையாகவே இருக்கின்றன. இது போன்ற செயல்பாடுகளை தவிர்க்க இந்திய தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை(Exit Poll) வெளியிடுவதற்கு குறிப்பிட்ட காலம் வரை தேர்தல் ஆணையம் தடை விதிக்கிறது.
இந்தத் தடையின்படி, ஏப்ரல் 9ஆம் தேதி காலை 7:00 மணி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 6:30 மணி வரை எந்தவொரு ஊடகமும் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடக்கூடாது. இதில் ஊடகம் என்பது அச்சு ஊடகம் , தொலைக்காட்சி , வலைதளங்கள் , சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றை சேர்த்து தான் கூறுகிறது. இது போன்ற கருத்துக்கணிப்புகள் , ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்து முடிந்தாலும் மற்ற மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல் முடிவுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் ஏப்ரல் 9-ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதியும், மேற்கு வங்காளத்தில் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 தேதியும் நடைபெற உள்ளது. அதனால் , எந்த மாநிலத்திலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஆயினும் அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடைந்த பின்னர் , கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை நீக்கப்படும்.
தேர்தல் ஆணையத்தின் இந்த தடையை மீறி, குறிப்பிட்ட காலக்கட்டத்தில் கருத்துக்கணிப்புகளை வெளியிடும் நிறுவனங்கள் மீதும் , தனி நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்கும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் கீழ், பிரிவு 126A-வின் படி இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட அளவில் அபராத தொகையும் அதனுடன் சேர்ந்து 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையையும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கிடைக்கலாம்.
கருத்துக் கணிப்பு தடையின் முக்கிய அம்சங்கள்:
வாக்குப்பதிவு தொடங்கும் 48 மணி நேரத்துக்கு முன்னதாகவே ,கருத்துக்கணிப்புகளை வெளியிடுவதற்கு தடை உள்ளது. தேர்தல் ஆணையம் முக்கிய ஊடகங்கள் மட்டுமின்றி , சமூக வலைதளங்களான X , பேஸ்புக் , யூ ட்யூப் உள்ளிட்டவைகளையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இதில் தனி நபராக சுய கருத்துக்கணிப்புகளை தடைக்காலத்தில் வெளியிடுவதும் குற்றமாகும். இவற்றை கண்காணிக்கவும் தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.