

பொதுவாக விமானங்கள் தரையிறங்கவும், புறப்படுவதற்கும் நீண்ட ஓடு பாதைகள் அவசியம் தேவை. இதன் காரணமாக சிறிய நகரங்களில் விமான நிலையங்களை அமைப்பது என்பது பெரும் சவாலான காரியமாக இருக்கிறது. ஆகையால் தற்போதைய சூழலில் பரந்த அளவிலான இடம் இருந்தால் மட்டுமே விமான நிலையங்களை அமைக்க முடியும்.
இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் விதமாக சென்னையில் உள்ள ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தொழில்நுட்பத்தின் படி, இனி விமானங்கள் புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் நீண்ட ஓடு பாதைகள் தேவைப்படாது. மாறாக இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம், இனி விமானங்கள் செங்குத்தாகவே தரையிறங்கவும், புறப்படவும் முடியும்.
குறைந்த பரப்பளவு கொண்ட இடங்களில் விமான நிலையங்களை அமைப்பது குறித்த சாத்தியக் கூறுகள் என்னென்ன என்பதை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். சென்னை ஐஐடி-யின் விண்வெளி பொறியியல் துறை பேராசிரியர் பி.ஏ.ராமகிருஷ்ணா, ஆராய்ச்சியாளர் அனந்து பத்ரன் மற்றும் இணை பேராசிரியர் ஜோயல் ஜார்ஜ் மனதரா ஆகியோரது தலைமையில் விமானத்தை செங்குத்தாக தரையிருக்குவது குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி நீண்ட ஓடு பாதைகளின் நீளத்தைக் குறைத்து விட்டால், குறைந்த பரப்பளவு கொண்ட இடங்களில் கூட விமான நிலையங்களை அமைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். இதற்காக ஆராய்ச்சி குழு தொடர் சோதனையில் ஈடுபட்டு வந்தது. முடிவில் விமானங்களை செங்குத்தாக தரையிறக்கவும், புறப்படவும் செய்தால் ஓடு பாதைகள் அவசியமே இல்லை என்பதை உணர்ந்து, அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
ஒரு விமானம் செங்குத்தாக தரையிறங்குவது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல. இதற்காக கடந்த சில ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்தப் புதிய தொழில்நுட்பம், உலகளவில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பத்தை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வரும் சென்னை ஐஐடிக்கு, தொழில்நுட்ப உலகில் இதுவொரு புதிய மைல் கல்லாகவே இருக்கும்
இதுகுறித்து ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் “நாங்கள் கண்டுபிடித்துள்ள புதிய தொழில்நுட்பத்தின் படி, விமானங்கள் புறப்படுவதற்கு ஓடுபாதையில் முன்னோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. விமானம் புறப்படுவதற்கு அப்படியே செங்குத்தாக மேலே பறப்பது போல், செங்குத்தாகவே தரையிறங்கி விடும்.
விமானத்தை செங்குத்தாக உயரே மேலெழுப்பவும், பொறுமையாக தரையிறக்கவும் ஹைப்ரிட் ராக்கெட் உந்து விசை பயன்படுத்தப்படும். பெரிய அளவில் விமான நிலையங்களை அமைக்க முடியாத கரடு முரடான இடங்களில் கூட, எங்களின் இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் எளிதாக அமைத்து விடலாம்.
தொலைதூரப் போக்குவரத்து மற்றும் இராணுவப் போக்குவரத்தில் இந்தத் தொழில்நுட்பம் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் பல்வேறு இடங்களுக்கு நாட்டின் விமான சேவை விரிவடையும்” எனத் தெரிவித்தனர்.
