

கோடை காலங்களில் பொதுவாக மின்வெட்டு ஏற்படுவது வாடிக்கையான ஒன்று தான். இருப்பினும் புதிய ஆட்சியில் மின்வெட்டிற்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் தற்போது திராவிட கட்சிகளை அகற்றி விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைத்துள்ளது.
ஆட்சி அமைத்த போதே, தகவல் தெரிவிக்காமல் மின்சாரம் துண்டிக்கப்படாது என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வாக்குறுதி அளித்தார். ஆனால் கடந்த சில நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு நேரங்களில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டது.
இதனை எதிர்த்து ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம் செய்யவே, மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் மின்வெட்டிற்கான காரணங்களையும் அவர் விளக்கியுள்ளார்.
அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், “மின்சாரத் துறையில் எந்த இடத்தில் எல்லாம் அதிகாரிகளால் தவறு நடந்ததுள்ளதோ, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு சில இடங்களில், ஒரு சில தனிநபர்களாலும் மின்தடை ஏற்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழக மக்களுக்கு தடையற்ற மற்றும் நம்பகமான மின்சார விநியோகத்தை வழங்க மின்வாரியம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் சீரான மின்சாரத்தை தடையின்றி வழங்க சில நாட்கள் தேவைப்படுகிறது. பல இடங்களில் பிரச்சனை உள்ளது. அதனை விரைவில் சரி செய்வோம். வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நகர்ப் புறங்களில் மின்சார பயன்பாடு அதிகாித்துள்ளதால், மின் அழுத்தம் ஏற்பட்டு மின்தடை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக அழுத்தம் காரணமாக அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை சாி செய்வதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மின் தடை ஏற்படும் பகுதிகளில் புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கவும், நிலத்தடி மின் கம்பியை வலுப்படுத்தவும், உயர்திறன் மின்மாற்றியை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் தேவை அதிகமாகவும், குறைவாகவும் இருப்பதனால் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய சென்னையில் 7 பொறியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்சார கம்பிகள் பழுதாகும் இடங்களை உடனே சென்று பார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சாரத் துறையை தனியார் வசம் ஒப்படைக்கும் எண்ணமே இல்லை. மின்துறை தமிழக அரசிடம் தான் இருக்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக தினந்தோறும் நலிவடைந்து, இன்று கிட்டத்தட்ட ரூ.2.5 லட்சம் கோடி கடனில் இருக்கிறது மின்சாரத் துறை.
1,40,000 பேர் வேலை பார்க்க வேண்டிய இடத்தில் இன்று 70,000 பேர் மட்டும் தான் பணி செய்கிறார்கள். மின் துறையை சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதனை சரி செய்யாமல் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் சீரமைக்க கூடிய விஷயம், இன்னும் 40 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
எனக்குத் தெரிந்து மின்சாரத் துறையில் 80% ஓட்டையை அடைத்து விட்டோம். மீதம் இருப்பதையும் விரைவில் சரி செய்வோம். நாங்கள் எந்தவொரு தனிநபரும் பயனடைவதற்காக அரசியலுக்கும், ஆட்சிக்கும் வரவில்லை. பொதுமக்கள் பயன்பெறவே வந்துள்ளோம்” என அமைச்சர் தெரிவித்தார்.
மின்சாரம் தொடர்பான அனைத்துப் புகார்களுக்கும் கால் சென்டர் நம்பரையும் அமைச்சர் கொடுத்துள்ளார். 94987 94987 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
இதுதவிர கட்டணமில்லா இலவச எண்ணான 1912 ஆகிய எண்ணையும் 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
துணை மின் நிலையங்களில் உள்ள பணியாளர்கள் வேறு பணிகளில் இருந்தால், உங்கள் அழைப்புகளை ஏற்க முடியாமல் போகலாம். இதனால் தான் இலவச மின்சார கால் சென்டர்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மின்துறை அறிவித்துள்ளது. இவர்கள் நிச்சயமாக பதிலளித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பார்கள்.