

இந்தியாவை பொறுத்தவரையில், தங்கம் ஆபரணமாக மட்டும் பார்ப்பது கிடையாது. முக்கிய முதலீடாகவும், செல்வத்தின் அடையாளமாகவும், கலாசாரம், பாரம்பரியம், குடும்பத்தின் ஒரு அங்கமாகவே பார்க்கிறார்கள். வீட்டில் ஒரு குண்டுமணி தங்கமாவது இருக்க வேண்டும் என்ற முனைப்பில் சிறுக சிறுக பணம் சேர்த்து வாங்கும் வழக்கம் இன்றளவும் இந்திய குடும்பங்களில் இருந்து வருகிறது.
ஆனால் சமீபகாலமாக இந்தியாவில் தங்கத்திற்கு இணையாக வெள்ளியின் விலையில் அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது தங்கத்தில் முதலீடு செய்பவர்களை விட வெள்ளியின் முதலீடு செய்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏனெனில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து உச்சத்தை அடைந்துள்ளதால் தங்கம் வாங்க முடியாத சாமானிய மக்கள், வெள்ளிப்பொருட்களை வாங்கி குவிப்பதுடன், எதிர்கால நலன் கருதி வெள்ளியில் முதலீடும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (அக்டோபர் 26-ம்தேதி) வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.170-க்கும், ஒரு கிலோ ரூ.1,70,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுவே இந்தாண்டு ஜனவரி மாதம் 2-ம்தேதி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.90,400க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 மாதங்களில் கிட்டத்தட்ட ரூ.79,000 வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளியின் விலை மிகவும் நல்ல நிதி நிலையில் இருப்பதால் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஏற்றது என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது வெள்ளியின் விலை குறைந்திருந்தாலும் வரும் காலங்களில் வெள்ளி விலை தொடர்ந்து உயரும் என்பதால் முதலீடு செய்வதற்கு வெள்ளி சிறந்த தேர்வாகும்.
ஆனால் சில வல்லூநர்கள், வெள்ளியின் விலை வரும் காலங்களில் உயரும் என்று எதிர்பார்த்தாலும், வெள்ளி விலை எப்போது வேண்டுமானாலும் சறுக்கலாம் என்பதால் அதில் முதலீடு செய்வது ரிஸ்கான வேலை என்று கூறி வருகின்றனர். இப்படியான நிலையில் சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நம் நாட்டில் அவசர காலங்களில் தங்கத்தை அடமானம் வைத்தே கடன் வாங்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆனால் தற்போது தங்கத்திற்கு மாற்றாக வெள்ளியை அடமானம் வைத்து கடம் பெறலாம் என்று ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
வங்கிகளில் வெள்ளியை அடமானம் வைப்பது தொடர்பாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி, வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் வெள்ளி காயின், வெள்ளி நகைகள் போன்றவற்றை வைத்து கடன் வாங்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே அடமானம் வைக்கப்பட்ட தங்கம்/வெள்ளியைப் பயன்படுத்தி மீண்டும் அடமானம் வைக்கவோ அல்லது கடன் கொடுக்கவோ முடியாது.
ஒருவர் எவ்வளவு தூரம் தங்கம், வெள்ளி உலோகங்களை வைத்து கடன் பெறலாம் என்பதற்கும் உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ வரையிலான தங்க ஆபரணங்களையும், 50 கிராம் வரையிலான தங்க நாணயங்களையும் அடமானம் வைத்து கடன் பெற முடியும் எனக் கூறியுள்ள ஆர்.பி.ஐ., 10 கிலோ வரையிலான வெள்ளி நகைகள், 500 கிராம் வரையிலான வெள்ளி நாணயங்களை அடமானம் வைக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
அதேபோல் ஒருவர் தான் வைத்த நகைக்கான வட்டியையும் அசலையும் திரும்பச் செலுத்திவிட்டால் வங்கிகள் அதிகபட்சம் 7 வேலை நாட்களுக்குள் அடமானம் வைக்கப்பட்ட தங்கம் அல்லது வெள்ளியைத் திருப்பித் தர வேண்டும். தாமதம் ஏற்பட்டால், ஒரு நாளுக்கு ₹5,000 இழப்பீடாகக் கடன் வாங்கியவருக்குச் செலுத்த வேண்டும். அதே சமயம் அடகு வைத்திருந்த போது தங்கம் அல்லது வெள்ளி நகைகளுக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டால் வங்கிகளே முழு இழப்பீட்டையும் கடன் வாங்கியவருக்கு வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்த புதிய விதிமுறை அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் சூழலில், வங்கிகள், NBFCகள், கூட்டுறவு வங்கிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.