

புவி வெப்பமடைதல் என்பது வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் (கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன்) அதிகரிப்பால், பூமியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை நீண்ட கால அடிப்படையில் உயரும் நிகழ்வாகும். தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் காடழிப்பு போன்ற மனித நடவடிக்கைகளால் ஏற்படும் இந்த மாற்றம், பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்ட உயர்வு மற்றும் தீவிர காலநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த, கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பது அவசியம்.
இந்நிலையில் புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மத்திய அரசு வெளியிட்ட ஒரு முக்கிய அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, புவி வெப்பமடைதலை எதிர்த்துப் போராடும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பொதுவாகக் குளிரூட்டும் வாயுக்களாகப் பயன்படுத்தப்படும் ஹைட்ரோஃப்ளூரோகார்பன்களை (HFCs) உற்பத்தி செய்வதற்கு, 2027 டிசம்பர் 31-க்குப் பிறகு எவ்விதமான புதிய சுற்றுச்சூழல் அனுமதிகளும் வழங்கப்படாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்த உத்தரவானது, எச்.எஃப்.சி(HFC) உற்பத்தியைக் படிப்படியாகக் குறைத்து, 2028-க்குள் முழுமையாகத் தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2027 டிசம்பர் 31-க்குப் பிறகு, HFC-களின் (ஹைட்ரோஃப்ளூரோகார்பன்கள்) உற்பத்திக்கான கூடுதல் திறன் எதற்கும் அனுமதி அளிக்கப்படாது என்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) உத்தரவிட்டுள்ளது.
குளிரூட்டிகள் (AC), குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் நுரைப் பொருட்களில் (foams) காணப்படும், வளிமண்டலத்தை வெப்பமாக்கும் ஆற்றல்மிக்க பசுமை இல்ல வாயுக்களான HFC-களையே (எ.கா: HFC-32, HFC-134a மற்றும் HFC-125) இந்தக் கட்டுப்பாடு இலக்காகக் கொண்டுள்ளது.
HFC-கள் ஓசோன் படலத்தைச் சிதைக்காவிட்டாலும், அவை கார்பன் டை ஆக்சைடை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமான, குறிப்பிடத்தக்க உயர் புவி வெப்பமாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
மேலும் இந்தக் குறைப்பு நடவடிக்கையானது பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 2040-ஆம் ஆண்டுக்குள் சுகாதாரம் மற்றும் காலநிலை தொடர்பான செலவுகளில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் வரை சேமிக்க வாய்ப்புள்ளது.
இந்தக் கட்டுப்பாடு, பெரும்பாலும் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள சுமார் 200 உற்பத்தி அலகுகளைப் பாதிக்கும்.
தேசிய குளிர்விப்பு செயல் திட்டத்தின் (NCAP) ஆதரவுடன், குறைந்த புவி வெப்பமாக்கும் ஆற்றல் கொண்ட மாற்று வழிகளை நோக்கித் தொழில்துறையை நகர்த்துவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, இந்த காலக்கெடுவிற்குள் விண்ணப்பிப்பவர்கள், தங்கள் உற்பத்தி ஆலை டிசம்பர் 31, 2027 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ முழுமையாகச் செயல்படத் தொடங்கிவிடும் (உற்பத்தி தொடங்குவது உட்பட) என்று உத்தரவாதம் அளிக்கும் ஒரு உறுதிமொழியைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இது தொடர்பான சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உத்தரவு, ஏப்ரல் 1-ம்தேதி அன்று, மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அதிகாரிகளுக்கும், மத்திய அளவிலான நிபுணர் மதிப்பீட்டுக் குழுக்களுக்கும் ஒரு அலுவலகக் குறிப்பின் வாயிலாக வெளியிடப்பட்டது.
இதன்படி சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பசுமைக்குடில் வாயுக்களை (HFC) குறைத்து, 2032-ம் ஆண்டுக்குள் 10 சதவீதமும், 2047-ம் ஆண்டுக்குள் 85 சதவீதமும் உற்பத்தியைக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2028 ஜனவரி 1 முதல் இந்தத் தடையானது நடைமுறைக்கு வரஉள்ளதால், HFC உற்பத்தியை முறைப்படுத்தவும் படிப்படியாகக் குறைக்கவும் ஒரு வலுவான பொறிமுறையை உருவாக்குவது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.