பரபரக்கும் அரசியல் களம் : இனி 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இடமில்லை: திமுகவில் வெடித்த சர்ச்சை!

dmk ex mla Ezhilan Naganathan
dmk ex mla Ezhilan Naganathanimage credit- The Caravan @thecaravanindia
Updated on

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிர்ச்சி தோல்வி அடைந்தது. சுமார் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறுவோம் என நம்பிக்கையாக இருந்த திமுகவினருக்கு இந்த தோல்வி அதிர்ச்சிகரமாக அமைந்தது. குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை சந்தித்ததை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்த வகையில் இந்த தோல்வி அவர்களுக்கு சற்று அதிர்ச்சி தரும் தோல்வி என்று தான் சொல்லவேண்டும். கடந்த ஐந்தாண்டு ஆட்சி செய்த திமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சியில் அமரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

தமிழ்நாட்டின் 2026 சட்டப்பேரவை தேர்தலில், சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 14 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது. திமுக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆனால், சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றிபெறவில்லை.

இதையும் படியுங்கள்:
உடன்பிறப்பே நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன்..! - திமுக-வை மீட்டெடுக்க ஸ்டாலின் கையில் எடுத்த புதிய ஆயுதம்!
dmk ex mla Ezhilan Naganathan

கடந்த 2016 மற்றும் 2021 சட்டப்பேரவை தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் திமுகவுக்கு இது மிகப்பெரிய இழப்பு. இதில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. குறிப்பாக திமுக 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி வேளச்சேரி தொகுதியிலும் வெற்றி பெற்றது.

சென்னை எப்போதுமே திமுகவின் கோட்டையாக இருந்துள்ளது என்பதை நன்கு அறிந்துதான் தொடக்கம் முதல் தவெக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்தியதால் தான் தவெக சென்னையில் மட்டும் 14 தொகுதியை கைப்பற்றியது.

இதனிடையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய திமுக தலைவர் முக ஸ்டாலின், தோல்விக்கு முழு பொறுப்பை தான் ஏற்பதாக தெரிவித்தார். மேலும் கட்சியில் சில மாற்றங்கள் வரும் எனவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்ய 35 பேர் அடங்கிய ஒரு குழுவை அமைத்துள்ளார் முக ஸ்டாலின்.

தொகுதி வாரியாக மக்களிடையே பேசி, தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டு ஜூன் முதல் வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அந்த குழுவிற்கு உத்தரவு போட்டுள்ளார் முக ஸ்டாலின். வரும் ஜூன் அல்லது ஜூலை மாத இறுதியில் கட்சியில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவில் பல்வேறு ஆலோசனைகள் நடந்து வரும் நிலையில், எழிலன் நாகநாதன் தனது முகநூல் (Facebook) பக்கத்தில் பகிர்ந்துள்ள சினிமா காமெடி வீடியோ, தமிழக அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

அந்த வீடியோவில், ‘60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இடமில்லை" (60+க்கு இடமில்லை) என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. மேலும், அந்தப் பதிவோடு "கோர்ஸ் கரெக்ஷன் (Course Correction), அதற்கான முதல் ஸ்டெப் இது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இந்த மறைமுகமானப் பதிவு வெளியான உடனே, அது இணையதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியது. திமுகவில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த நிர்வாகிகளுக்கு இனி இடமில்லை என மறைமுகமாகச் சொல்ல வருகிறீர்களா என்று நெட்டிசன்கள் பலரும் அந்தப் பதிவின் கீழ் கேள்வி கணைகளை எழுப்பி கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து கட்சி கூட்டங்களை நடத்தி வரும் ஸ்டாலின் தோல்விக்கான காரணத்தை கண்டறிய கள ஆய்வு பணியில் ஈடுபட்டு வரும் இந்த சூழலில் திமுக கட்சியில் இளைஞர்களுக்கும், மகளிருக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு முக்கியப் பதவிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அடுத்தடுத்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்:
கொளத்தூரில் நன்றி தெரிவித்த ஸ்டாலின் ! கதறி அழுத சேகர்பாபு மற்றும் திமுக தொண்டர்கள்!
dmk ex mla Ezhilan Naganathan

இந்தச் சூழ்நிலையில் தான், திமுக முன்னாள் எம்எல்ஏவும், அக்கட்சியின் மருத்துவ அணி செயலாளருமான எழிலன் நாகநாதன் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவு, மூத்த தலைவர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, கட்சியில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும் என்பதைத் தூசகமாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்துவது போல் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com