

ஓலா, உபெர் உள்ளிட்ட வாடகை கார் சேவைகளில், பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவே வாடிக்கையாளர்களிடம் 'டிப்ஸ்' கேட்பதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பயணம் தொடங்குவதற்கு முன்பாக கூடுதல் பணம் செலுத்தக் கோரும் நடைமுறையை உடனடியாகச் செயலிகளிலிருந்து நீக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அனைத்து நிறுவனங்களுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் பயணியர் வசதிக்காக, 'மொபைல் போன்' செயலிகள் மூலம் ஓலா (Ola), உபேர் (Uber) மற்றும் ரேபிடோ (Rapido) நிறுவனங்கள் பைக் டாக்சிகளை (வாடகை கார்கள்) இயக்கி வருகின்றன. இதன் மூலம் சென்னை போன்ற நகரங்களில் எளிதாக பயணங்களை மேற்கொள்ள முடியும்.
இந்தியாவில் ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ போன்ற பயணச் செயலிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் அவசர தேவைக்காக ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட செயலிகள் மூலம் ஆட்டோ, கார், பைக் போன்ற வாடகை வாகனங்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த செயலிகளில் பயணம் முன்பதிவு செய்யும்போதே ஓட்டுநர்களுக்கு டிப்ஸ் வழங்குவதற்கான ஆப்ஷன்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், டிப்ஸ் வழங்கினால் விரைவாக பயணம் உறுதி செய்யப்படும் என்பது போன்ற தகவல்களும் காட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
அதாவது, சமீபகாலமாக ஓலா மற்றும் உபெர் போன்ற செயலிகளில் வாடகை வாகனங்களை முன்பதிவு செய்யும்போது, "முன்பண டிப்ஸ் (Advance Tip) வழங்குங்கள்", "கூடுதல் தொகையைத் தேர்வு செய்யுங்கள்" அல்லது "டிப்ஸ் அளித்தால் வாகனம் விரைவில் உறுதி செய்யப்படும்" என்ற பெயரில் குறுஞ்செய்திகள் காட்டப்பட்டு வந்தன. இதன் காரணமாக, கூடுதல் கட்டணம் செலுத்தாத பயணிகளின் கோரிக்கைகளை ஓட்டுநர்கள் நிராகரிப்பதாகவும், அவசரத் தேவையின் போது பயணிகள் மறைமுகமாக அதிகக் கட்டணம் செலுத்த வற்புறுத்தப்படுவதாகவும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்குப் பல்வேறு புகார்கள் குவிந்தன.
இந்த புகார்களை தீவிரமாகப் பரிசீலித்த மத்திய அரசு, இதுபோன்ற நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் (Motor Vehicle Aggregator Guidelines) வழிகாட்டுதல்கள், 2025’ கீழ் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி, பயணிகள் தங்களது விருப்பத்தின் பேரில் வழங்கும் டிப்ஸ் தொகையை, பயணம் முழுமையாக முடிவடைந்த பிறகு மட்டுமே கோர முடியும். பயணம் தொடங்கும் முன் அல்லது முன்பதிவின் போது வாடிக்கையாளர்களுக்கு எந்தவித உளவியல் அழுத்தத்தையும் தரக்கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டிப்ஸ் வழங்குவது என்பது பயணியின் முழுமையான விருப்பமாக மட்டுமே இருக்க வேண்டும். பயணம் முடிந்த பிறகு மட்டுமே டிப்ஸ் வழங்குவதற்கான வசதி செயலியில் இருக்க வேண்டும். பயணம் தொடங்குவதற்கு முன்போ அல்லது பயணத்தின்போதோ டிப்ஸ் கேட்கும் எந்தவொரு ஆப்ஷனும் செயலியில் இடம்பெறக்கூடாது.
அதேபோல், கூடுதல் டிப்ஸ் வழங்கினால் ஓட்டுநர் பயணத்தை விரைவாக உறுதி செய்வார் அல்லது கேப் விரைவில் கிடைக்கும் என்பது போன்ற பயணிகளைத் தூண்டும் தகவல்களும் இருக்கக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, பயணிகள் வழங்கும் டிப்ஸ் தொகை முழுமையாகச் சம்மந்தப்பட்ட ஓட்டுநரின் கணக்கிற்கே செல்ல வேண்டும் என்றும், அதில் எந்தவொரு பிடித்தத்தையும் கார் சேவை நிறுவனங்கள் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறைகள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-க்கு முரணானவை என தெரிவித்துள்ள மத்திய அரசு, சட்டத்திற்கு முரணாகச் செயல்படும் மற்றும் வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தும் எந்தவொரு செயலி அம்சமும் சட்டவிரோதமானதாகக் கருதப்படும் என எச்சரித்துள்ளது. மேலும் விதிகளை அனைத்து செயலிகளும் உடனடியாக ஆய்வு செய்து தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பயணக் கட்டணத்தைத் தாண்டி முன்பே டிப்ஸ் கொடுத்தால் மட்டுமே கார் வரும் என்ற நிலை உருவாவதைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கை, வாடகை வாகனங்களை வழக்கமாகப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான மக்களுக்கு தேவையற்ற நிதி நெருக்கடியில் இருந்து பெரிய நிம்மதியை அளித்துள்ளது.