மாபெரும் கண்டுபிடிப்பு: வேதியியலில் நோபல் பரிசு (2025) வென்ற 'மாயப்பை' வித்தகர்கள்..!!

Nobel chemistry prize 2025
Nobel chemistry prize
Published on

வேதியியல் உலகில் நடந்த ஓர் அதிரடி அறிவிப்பு! 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு, அறிவியல் உலகையே வியக்க வைக்கும் ஒரு 'மந்திரப் பைக்கு' வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கண்டுபிடிப்பு குறித்த முழு விவரங்கள் பார்க்கலாமா?

பரிசு பெற்ற அந்த மூன்று மேதைகள் யார்?

இந்த ஆண்டின் உயரிய வேதியியல் நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்ட அந்த மூன்று விஞ்ஞானிகள் இவர்கள்தான்:

  • சுசுமு கிட்டகாவா (Susumu Kitagawa) – ஜப்பான்

  • ரிச்சர்ட் ராப்சன் (Richard Robson) – ஆஸ்திரேலியா

  • ஓமர் எம். யாகி (Omar M. Yaghi) – அமெரிக்கா

இவர்கள் மூவரும் இணைந்து கண்டுபிடித்த அந்தப் புதிய பொருளுக்காகத்தான் இந்தப் பாராட்டு கிடைத்திருக்கிறது.

கண்டுபிடித்தது என்ன? (ஹெர்மியோனியின் கைப்பை விளக்கம்!)

இந்த மேதைகள் உருவாக்கிய பொருளுக்கு உலோக-கரிம கட்டமைப்புகள் அல்லது சுருக்கமாக MOF (Metal-Organic Frameworks) என்று பெயர்.

1. பொருள் சிறியது, உள்ளே பிரமாண்டம்!

இந்தப் புதிய கண்டுபிடிப்பை, பிரபல ஹாரி பாட்டர் கதையில் வரும் ஹெர்மியோனியின் மாயாஜாலக் கைப்பைக்கு (Hermione's Handbag) ஒப்பிடுகிறார்கள்.

  • தோற்றம்: பாக்குறதுக்கு ஒரு சாதாரணப் பொருள் போலச் சின்னதா இருக்கும்.

  • வித்தை: ஆனால், உள்ளே எத்தனை பெரிய பொருளையும், எவ்வளவு நிறையையும் அடைத்து வைக்க முடியும்!

2. சர்க்கரைக் கட்டி சைஸ், கால்பந்து மைதானப் பரப்பு!

இந்தப் பொருளின் நுட்பம் இங்கேதான் இருக்கிறது. சாதாரண சர்க்கரைக் கட்டி அளவில் உள்ள ஒரு சிறிய MOF பொருளை எடுத்துக்கொண்டால், அதன் உள் பகுதி மொத்தத்தையும் பிரித்துப் பார்த்தால், அது ஒரு பெரிய கால்பந்து மைதானத்தின் பரப்புக்குச் சமமாக இருக்குமாம்!

இந்த மாயாஜாலப் பொருள், உள்ளே நிறையக் காற்றையும், வாயுக்களையும் அடைத்து வைக்கும் அளவுக்குத் துளைகளை (ஓட்டைகளை) கொண்ட ஒரு நுட்பமான கட்டமைப்பைக் கொண்டது.

விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எப்படிப் பயன்?

இந்தப் புதிய 'மாயப் பை' மாதிரியான பொருளால், உலகம் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்:

வறண்ட நிலத்தில் தண்ணீர் சேகரிப்பு

மிகவும் வறண்ட பாலைவனக் காற்றில் இருக்கும் கொஞ்சூண்டு ஈரப்பதத்தைக் கூட இந்தப் பொருள் உறிஞ்சி, தண்ணீராகச் சேமிக்க முடியுமாம்.

இதனால், தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்குப் பெரிய வரப்பிரசாதம் இது!

மாசுக் கட்டுப்பாடு மற்றும் தூய்மையான காற்று

தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு போன்ற நச்சுக் காற்றுகளை (வாயுக்களை) இந்தப் பொருள் உள்ளே பிடித்து வைத்துக்கொள்ளும். இதனால், பூமி சூடாவதைத் (Climate Change) தடுக்க முடியும்.

நச்சு வேதிப்பொருட்களை நீக்குதல்

தண்ணீரில் கலந்திருக்கும் நச்சு வேதிப்பொருட்களை (PFAS) மற்றும் வீணாகும் மருந்துகளின் (Pharmaceuticals) தடயங்களைக்கூட இந்தப் பொருள் பிரித்தெடுத்து, தண்ணீரையும், சுற்றுச்சூழலையும் சுத்தப்படுத்த உதவும்.

பாதுகாப்பான வாயுச் சேமிப்பு

ஹைட்ரஜன் போன்ற எரிபொருள் வாயுக்களைச் சிறிய இடத்தில் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
2025 மருத்துவ நோபல் பரிசு: நோய் எதிர்ப்புச் சக்தியின் 'பாதுகாப்பு வீரர்கள்' கண்டுபிடிப்பு!
Nobel chemistry prize 2025

விஞ்ஞானியின் கனவு

இந்தப் பரிசைப் பெற்ற சுசுமு கிட்டகாவா, "காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடு, ஆக்ஸிஜன், நீராவியைப் பிடித்து, அவற்றை மறுசுழற்சி மூலம் பயனுள்ள பொருளாக மாற்ற வேண்டும் என்பதே என் கனவு" என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலம், வேதியியல் வல்லுநர்கள் பல்லாயிரக்கணக்கான வெவ்வேறு MOF கட்டமைப்புகளை உருவாக்கி, மனிதகுலத்தின் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று நோபல் அகாடமி தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com