

உ.பி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) அமைந்துள்ள பிரம்மாண்டமான நொய்டா-ஜெவார் சர்வதேச விமான நிலையத்திற்கு ‘நரேந்திர மோடி சர்வதேச விமான நிலையம்’ (Narendra Modi International Airport, Noida-Jewar) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இப்பெயர் மாற்றத்திற்கான முன்மொழிவுக்கு உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2001-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக பொறுப்பேற்றது முதல், தற்போது நாட்டின் பிரதமராக தொடர்ந்து 25 ஆண்டுகள் தடையற்ற மக்கள் சேவையாற்றியுள்ளாரென தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், அவரது இந்த மகத்தான சாதனையை போற்றும் வகையில் அமைச்சரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத்:
உத்திரப் பிரதேசத்தின் உள்கட்டமைப்பை சர்வதேச அளவில் உயர்த்திய பிரதமர் மோடிக்கு மாநில அரசின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆளுமை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த விமான நிலையத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது," என்றார்.
"2017-க்கு முன்பிருந்த உத்தரப் பிரதேசம் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையினாலும், முறையற்ற நிர்வாகத்தினாலும் பின் தங்கியிருந்தது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலால் தற்போது வெளிப்படையான நிர்வாகம், சிறந்த சட்டம்-ஒழுங்கு மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் உருவாகி உ.பி. இந்தியாவின் பொருளாதாரப் பொறிமுறையாக மாறியுள்ளது" எனக் குறிப்பிட்டார்.
நடப்பாண்டு மார்ச் 28 அன்று பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட இந்த விமான நிலையத்திற்கு, ஜூன் 15 அன்று லக்னோவில் இருந்து வந்த இண்டிகோ (IndiGo) விமானம் முதன்முதலாகத் தரையிறங்கியது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் ஏர்போர்ட் இன்டர்நேஷனல் ஏஜி (Zurich Airport International AG) நிறுவனத்தின் துணை அமைப்பான யமுனா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் உ.பி. அரசின் நோய்டா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளன.முதற்கட்டமாக ரூ.11,282 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம், ஆண்டுக்கு 1.2 கோடி பயணிகளைக் கையாளுமாறு உருவாக்கப்பட்டுள்ளது. இது விரைவில் 7 கோடி பயணிகளாக உயர்த்தப்படவுள்ளது.
போயிங் 777 மற்றும் ஏர்பஸ் ஏ380 போன்ற உலகின் மிகப்பெரிய 'வைட்-பாடி' (Wide-body) ரக சர்வதேச விமானங்களும் வந்து செல்லக்கூடிய வகையில் 3,900 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது.அனைத்துவிதமான வானிலை மற்றும் பனிமூட்டத்திலும் விமானங்கள் தடையின்றித் தரையிறங்க இருபுறமும் Instrument Landing System (ILS) தொழில்நுட்பம் நிறுவப்பட்டுள்ளது.
நொய்டா சர்வதேச விமான நிலையம் வெறும் விமான நிலையமாக மட்டுமின்றி, நாட்டின் மிகச் சிறந்த பன்முகப் போக்குவரத்து மையமாகத் (Multimodal Hub) திகழவுள்ளது.யமுனா எக்ஸ்பிரஸ்வே (Yamuna Expressway) மூலம் டெல்லி, நொய்டா, ஆக்ரா நகரங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேக்கான புதிய இணைப்புச் சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது.நோய்டா அக்வா லைன் மெட்ரோ விரிவாக்கம் மற்றும் காசியாபாத் - ஜெவார் நமோ பாரத் (RRTS) அதிவேக ரயில் மூலம் பயணிகள் விரைவாக வந்தடையும் வசதிகள் செய்யப்படுகின்றன. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக, நாட்டின் மிகப்பெரிய விமான போக்குவரத்து மையங்களில் ஒன்றாக இந்த நரேந்திர மோடி சர்வதேச விமான நிலையம் திகழும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.