

தென்கிழக்கு வங்கக் கடலில் சனிக்கிழமையான இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவ.24-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பட்சத்தில், அதற்கு ‘சென்யார்’ எனப் பெயர் சூட்டப்படும்.
இந்த புயல் சின்னம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 22 முதல் 27 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக பின்வரும் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை (நவ. 23 - ஞாயிற்றுக்கிழமை): கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களைப் பொறுத்தவரை, நவ.22, 23 ஆகிய தேதிகளில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்த நாட்களில் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர்:
தென் மாவட்டங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார்.இன்று அல்லது நாளை வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது எனவும், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளார்.
இதன் தாக்கம் கடலோர மாவட்டங்களிலும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் எதிரொலிக்கும். இந்த மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, இன்று திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஹேமசந்தர் குறிப்பிட்டுள்ளார்.