தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங் மாநில மாகாண சுகாதாரத் துறையின் ஆய்வில் , ஃபோஷானில் உள்ள ஜிங்ஹுய் நடுநிலைப் பள்ளியில் நோரா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. இங்குள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் 103 மாணவர்களுக்கு நோரா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்தனர். சுகாதார அதிகாரிகளின் தகவலின் படி , நோரா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தாலும் , உயிரிழப்பு போன்ற மோசமான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சை உள்ளனர். அவர்களின் உடல் நலம் சீராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1968 ஆம் ஆண்டு ஓஹியோவின் நோர்வாக்கில் ஏற்பட்ட ஒரு தொற்றுநோய் பரவலில் நோரா வைரஸ் கண்டறியப்பட்டது. அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உணவு மூலம் பரவும் நோய்களை ஏற்படுத்துவதில் இந்த வைரஸ் முதலிடத்தில் உள்ளது. நோரா வைரஸ் என்பது வயிற்றையும் குடலையும் நேரடியாக பாதிக்கும் ஒரு நோய் தொற்றாகும். இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட 12 முதல் 48 மணி நேரத்திற்குள் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். இந்த வைரஸ்கள் மிகவும் வேகமாக பரவக்கூடியவை , உலக அளவில் அதிக இரைப்பை மற்றும் குடல் அழற்சி நோய்களுக்கு காரணமாக இந்த வைரஸ் உள்ளது.
அறிகுறிகள்:
இந்த வைரஸ் சுவாசக் குழாயை விட, குடல் பாதையை அதிகம் பாதிக்கிறது. இது போன்ற காரணங்களினால் , இந்நோய் வயிற்று புளு (Stomach Flu) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொதுவான அறிகுறிகள் குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு , உடல் சோர்வு , லேசான காய்ச்சல் , உடல் வலி , தலைவலி ஆகியவை எச்சரிக்கையாக இருக்கின்றன. தொண்டை வறட்சி, சிறுநீர் அளவு குறைதல் , சிறுநீர் அடர் மஞ்சளாக மாறுதல் , தலைச்சுற்றல் , மயக்கம் ஆகிய தொடர்ச்சியான நீரிழப்பு அறிகுறிகள், இந்த நோய் மோசமான நிலைக்கு செல்வதற்கான அறிகுறிகளை உணர்த்துகின்றன.
நோய் பரவலை தடுக்க உள்ளூர் சுகாதாரத் துறைகள் விரிவாக நடவடிக்கைகளை தொடங்கின , பள்ளி வளாகம் முழுமையும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு , சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் எவ்வாறு பள்ளி மாணவர்களுக்கு பரவியது என்பதற்கான விசாரணை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தொடர்ச்சியாக மருத்துவ கண்காணிப்பு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு ஏற்படும் நீரிழிப்பு அல்லது உடல்நிலை பாதிப்பு ஆகியவற்றையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
குவாங்டாங்கில் பருவகால அச்சுறுத்தல்:
குவாங்டாங்கில் வழக்கமாக குளிர்கால பருவநிலைகளில் இது போன்ற தொற்று நோய்கள் பரவ ஆரம்பிப்பது இயல்பு. வழக்கமாக அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் நோரோ வைரஸ் வெடிப்புகள் பொதுவாக உச்சத்தை எட்டும். தற்போது நோரா வைரஸ்கள் தங்களின் உச்ச காலகட்டத்தை அடைந்துள்ளன.
குவாங்டாங்கில் பள்ளிகள் , மருத்துவ மனைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் , நோரா வைரஸ் மிக வேகமாக பரவிக் கொண்டு வருகிறது.
உலகளாவிய தாக்கம்:
சர்வதேச அளவில் ஆண்டுதோறும் 685 மில்லியன் பேர் இந்த நோயால் பாதிப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இதன் விளைவாக குறைந்த வருமான நாடுகளில் 200,000 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.
நோயை தடுக்கும் வழிமுறைகள்:
நோரா வைரஸ் எளிதில் பரவக்கூடியது மற்றும் மீள்தன்மை உடையது. கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது பரவலைத் ஓரளவு தடுக்கும். தொற்று உள்ளவர்கள் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும். இந்த நோய்க்கு பிரத்யேகமாக தனிப்பட்ட மருந்துகள் எதுவும் இல்லை. 1முதல் 3 நாட்களுக்குள் இந்த நோய் தானாகவே சரியாகிவிடும். நிலைமை சரியில்லாத பட்சத்தில் உடனடியாக மருத்துவராக அணுகுவது சிறந்தது.