தென்கொரியாவில் மிகவும் பிரபலமான K-POP இசைக்குழுவின் நிகழ்ச்சிகளை பார்த்ததற்காக, வடகொரிய சிறுவர்கள் இரண்டு பேருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
K-POP இசைக்குழு உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானதாகும். இவர்களது காணொளியை பார்த்ததற்காக 16 வயதே நிரம்பிய இரண்டு வடகொரிய சிறுவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்ட செய்தி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த காணொளி வெளியாகி மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டில் இத்தகைய குற்றத்தை செய்பவர்களை தண்டிப்பதற்காகவே புதிய சட்டத்தை வட கொரிய அரசாங்கம் கொண்டு வந்தது. மேலும் தங்களது கட்டுப்பாட்டை மீறி பொதுமக்கள் செய்யும் எல்லா செயல்களுக்கும் தண்டனை வழங்கும் வழக்கம் பல ஆண்டுகளாகவே வடகொரியாவில் உள்ளது.
இதில் ஒரு பகுதியாக தென்கொரியாவின் பொழுதுபோக்கு அம்சங்களை வடகொரிய மக்கள் பார்ப்பதை தடுக்கும் சட்டமும் கொண்டுவரப்பட்டு அந்த சட்டத்தின் கீழ் தற்போது இரண்டு சிறுவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு கடுமையான வேலைகள் செய்ய வேண்டும் என்ற தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒரு காலத்தில் வடகொரியாவில் வசித்த பேராசிரியர் ஒருவர் கூறுகையில்,
“சிறுவர்கள் என்றும் பாராமல் இத்தகைய தண்டனை வழங்கி வடகொரிய மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. தென்கொரியாவின் மேற்கத்திய கலாச்சாரம் வடகொரியாவில் வந்து விடக்கூடாது என்பதற்காக இப்படி கடுமையாக நடந்து கொள்கிறார்கள். சிறுவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது தொடர்பான காணொளி 2022 இல் எடுக்கப்பட்டு இருக்கலாம். வடகொரியாவில் கிம் ஜாங் உன்னுக்கு எதிராக மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்புவதால் இத்தகைய தண்டனைகளை அவர் அமல் படுத்துகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த தண்டனை குறித்து வெளியான காணொளியில், ஒரு திறந்தவெளியில் இரண்டு சிறுவர்கள் கை கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்படுகிறார்கள். அந்த இடத்தைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் அனைவருமே மாஸ்க் அணிந்திருப்பதால் அந்த வீடியோ கொரோனா காலத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம். அப்போது ஒருவர் சிறுவர்களுக்கான தண்டனையை அறிவிக்கிறார். “இந்த சிறுவர்கள் இருவரும் வெளிநாட்டு கலாச்சாரத்தை விரும்புவதால் தன் வாழ்க்கையை அழித்துக் கொண்டனர். K-POP நிகழ்ச்சிகளை இவர்கள் கண்டு ரசித்த குற்றத்திற்காக 12 ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டும்” என்ற தண்டனை வழங்கப்படுகிறது எனக் கூறினார்.