உலகமே 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் வேளையில், ஒரு சில நாடுகள் இன்னும் அடிப்படை தகவல் தொடர்பு வசதிகளைக்கூட முழுமையாக அடையவில்லை என்பது ஆச்சர்யத்திற்குறியது. வடகொரியா அத்தகைய நாடுகளில் ஒன்றாகும். இங்கு இன்னும் 2ஜி இணைய வசதி மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. அதுமட்டுமின்றி, அரசு அனுமதி பெறாத வெளிநாட்டு வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பது கூட கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.
வடகொரியாவில் தகவல் தொடர்பு மற்றும் ஊடகங்கள் மீது அரசுக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது. நாட்டின் குடிமக்கள் வெளி உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வதைத் தடுக்கும் நோக்கில், அரசு ஊடகங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பொதுமக்களுக்குக் கிடைக்கும் கைப்பேசி சேவைகள் பெரும்பாலும் உள்நாட்டுத் தொடர்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இணையப் பயன்பாடு மிகக் குறைவாகவே உள்ளது, மேலும் பெரும்பாலான மக்களுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் இணைய வலையமைப்பு (இன்ட்ராநெட்) மட்டுமே கிடைக்கிறது.
அரசின் கடுமையான கட்டுப்பாடுகள், வானொலி நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும். வடகொரியாவில் விற்கப்படும் அனைத்து வானொலிப் பெட்டிகளும், அரசுக்குச் சொந்தமான சேனல்களை மட்டுமே கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட அல்லது வெளிநாட்டு சேனல்களில் ஒலிபரப்பு செய்யப்படும் எந்த நிகழ்ச்சிகளையும் கேட்கக்கூடிய வானொலிப் பெட்டிகளை வைத்திருப்பதோ அல்லது வெளிநாட்டு வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பதோ சட்டவிரோதமானது. இது கண்டறியப்பட்டால், கடுமையான சிறைத் தண்டனை அல்லது அதற்கும் மேலான தண்டனைகள் விதிக்கப்படும்.
இந்த விதிகள், வடகொரிய மக்கள் வெளிநாட்டுச் செய்திகளையோ அல்லது உலக நடப்புகளையோ அறிந்துகொள்வதைத் தடுக்கிறது. இதனால், இந்த கடுமையான ஆட்சியின் மீது சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. வெளியுலக தகவல்கள், குறிப்பாக தென் கொரியாவில் இருந்து வரும் வானொலி ஒலிபரப்புகள், வடகொரிய எல்லைகளில் கடுமையான முறையில் தடுக்கப்படுகின்றன.
இன்னும் 2ஜி தொழில்நுட்பத்துடன் போராடி வரும் இந்த நாட்டில், தகவல் சுதந்திரம் என்பது கனவாகவே உள்ளது. வெளிநாட்டு ஊடகங்களைக் கேட்பதற்கான கடுமையான தண்டனைகள், தனிநபர்களின் அடிப்படை சுதந்திரங்களை அப்பட்டமாக மீறுவதாகவே பார்க்கப்படுகிறது.