பால் குடிக்காமல் அழும் குழந்தைகளின் ‘பாலாரிஷ்டம்’ தோஷம் தீர்க்கும் அபூர்வ கோயில்!

Sri Maatruraivaratheeswarar, Sri Natarajar
Sri Maatruraivaratheeswarar, Sri Natarajar
Published on

திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பாச்சிலாச்சிரமம் என்ற பாடல் பெற்ற திருத்தலம். தற்போது இது திருவாசி எனப்படுகிறது. இத்தலத்தில் அருளும் இறைவன் அருள்மிகு பாலாம்பிகை சமேத மாற்றுரைவரதீஸ்வரர். இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமையானது.

ஆதியில், ‘சமீவனேஸ்வரர்’ என அழைக்கப்பட்ட ஈசன் பிற்காலத்தில், 'மாற்றுரைவரதீஸ்வரர்' என அழைக்கப்படுவதன் காரணம் மிகவும் சுவாரசியமானது.

சுந்தரர் திருத்தல யாத்திரை செல்லும்போது தனது அடியார்களுக்கு குறைவிலாது உணவு வழங்குவது வழக்கம். இதற்காக செல்லும் இடங்களில் ஈசனிடம் பொன் பெறுவது வழக்கம். அப்படி திருவாசி தலத்தில் பொன் பெற்றபோது அதன் தரத்தை அறிந்துகொள்ள வேண்டினார். ஈசனே மாற்று உருவில் வந்து பொன்னின் தரத்தை உரைத்துச் சொன்னாராம். அதனால் இத்தல இறைவனுக்கு, 'மாற்று உரை வரதீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்:
மனித உயிரின் சூத்திரக் கயிறாக விளங்கும் அக்னி தேவன்!
Sri Maatruraivaratheeswarar, Sri Natarajar

கருவறையில் ருத்ராட்ச பந்தலின் கீழ் ஈசன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். ராஜகோபுரத்தின் கீழ் அதிகார நந்தி, தனது மனைவியுடன் எழுந்தருளியுள்ளார். நவகிரக சன்னிதியில் சூரியன் தனது மனைவியருடன் காட்சி தருகிறார். மற்ற கிரகங்கள் எல்லாம் அவரைப் பார்த்தபடி இருப்பது இக்கோயிலின் சிறப்பு.

கொல்லிமலை மன்னனின் மகளைத் தாக்கிய நோயை மடக்கி ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார் ஈசன். இதனால் இங்குள்ள நடராஜர் காலுக்குக் கீழே முயலகன் உருவம் இல்லாமல் நாகத்தின் மீது ஈசன் நடனமாடுகிறார் என்பது இங்கு மட்டும் காணக்கூடிய சிறப்பு.

வைகாசி மாதம் பெளர்ணமி தொடங்கி 11 நாட்கள் முத்துப் பல்லக்கு விழா இங்கு விசேஷமான விழாவாகும். சோம வாரம் திங்களில் 7 விளக்குகளில் இலுப்ப எண்ணெய் ஊற்றி இத்தல இறைவனுக்கும் அம்பாளுக்கும் தீபம் ஏற்றினால்  குடும்பப் பொருளாதாரம் மேம்படும்.

இதையும் படியுங்கள்:
ஒரே நேரத்தில் 5 லட்சம் பேர் குரலில் ஒலிக்கப்போகும் கந்த சஷ்டி கவச சாதனை முயற்சி!
Sri Maatruraivaratheeswarar, Sri Natarajar

ஐந்து வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள அன்னமாம் பொய்கையில் நீராடி, அம்மனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்தால் திருமணம் விரைவில் நடைபெறும். தீராத வயிற்று வலி, நோயுற்றவர்கள் இங்கு ஒன்பது வாரம் தொடர்ந்து விளக்கு போட நல்ல பலன் கிடைக்கும்.

பால் குடிக்காமல் அழும் கைக்குழந்தைகளின் 'பாலாரிஷ்டம்' என்ற தோஷம் நீங்க காலை 7 மணி முதல் 12 மணிக்குள் இங்குள்ள அம்பாளுக்கு அபிஷேகம் செய்து குழந்தை பெயரில் அர்ச்சனை செய்து, அபிஷேக தீர்த்தத்தை குழந்தை மீது தெளித்தால் பாலாரிஷ்ட தோஷம் தீரும் என்பது நம்பிக்கை. இத்தல அம்பிகை அன்னப்பறவையாக வந்து, 'அன்னமாம் பொய்கை' என்ற தீர்த்தத்தில் வளர்ந்து ஈசனை வணங்கி அருள் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com