உலகினை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகள் செய்து வருகிறது. வடகொரியா தற்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்யப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. வடகொரியா ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது எனலாம்.
தென்கொரியா மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து வாஷிங்டனில் அடுத்த வாரம் கூட்டு பயிற்சியில் ஈடுபட இருப்பதாக இருந்தது. இதற்கு வடகொரியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திடீரென கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை செய்துள்ளது. இதனிடையே, தென்கொரிய கடல் பகுதிகளில் அமெரிக்கா மற்றும் தென்கொரிய விமானப் படைகள் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டன.
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை அண்டை நாடுகளை தாக்காத வகையில் செங்குத்தாக ஏவப்பட்ட ஏவுகணை, கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பான் கடற்பகுதியில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தென் கொரியா ராணுவம் கூறும்போது, அதிகாலையில் ஏவப்பட்ட ஏவுகணை 66 நிமிடங்கள் வானில் பறந்து கடலில் விழுந்தது என்றும் சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்றது என்றும் தெரிவித்தது.
வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பான் கடல் பகுதியில் விழுந்துள்ளது. அந்த ஏவுகணை கிழக்கு கடற்கரையில் இருந்து ஹொக் கைடா மாகாணத்தின் மேற்கு ஓஷிமா தீவு அருகே விழுந்ததாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்தார்.
அமெரிக்காவின் நிலப்பரப்பை முழுமையாக தாக்கும் அளவுக்கு இந்த ஏவுகணை திறன் பெற்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இது அணு ஆயுதங்களையும் ஏந்திச் செல்லும் வல்லமை பெற்றது என வடகொரியா கூறியுள்ளது. . இதனால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.