மழைக்காலத்தில் இந்த தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க.! – உஷார்படுத்தும் மின்சாரத்துறை..!

வடகிழக்கு பருவமழை மின் பாதுகாப்பு வழிகாட்டி - TANGEDCO Guidelines
மின் பாதுகாப்பு
மின் பாதுகாப்புSource: AI image
Updated on: 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. பல்வேறு பகுதிகளுக்கு ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பலத்த காற்று, கனமழை, இடி மற்றும் மின்னல் காரணமாக மின்விநியோகக் கட்டமைப்புகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.இதனால் ஏற்படக்கூடிய மின்கசிவு, மின்விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்க பொதுமக்களும், தமிழ்நாடு மின்பகிர்மான கழக பணியாளர்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என மின்சாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு:

வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், பொதுமக்கள் மின்சாரத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும். மின் கம்பிகளை தொடக் கூடாது. அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் அருகில் செல்லக்கூடாது. தாழ்வாக மின் கம்பிகள் இருந்தால் உடனடியாக மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்பகிர்மானப் பெட்டிகள், மின்கம்பிகள் மற்றும் ஸ்டே கம்பிகளின் அருகில் செல்வதையும், அவற்றின் அருகே தேங்கியுள்ள மழைநீரில் இறங்குவதையும் தவிர்க்க வேண்டும். இத்தகைய ஆபத்துகளை கண்டால் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மின் கம்பத்தில் அல்லது மின் இழுப்பை கம்பிகளில் கால்நடைகளைக் கட்டுதல், துணிகளை காயப்போடுதல், விளம்பரப் பலகைகளை பொருத்துதல் போன்றவற்றை செய்யக்கூடாது.

மின் பாதுகாப்பு Rainy season precautions
மின் பாதுகாப்பு Rainy season precautions

தரையிலோ, சாலையிலோ அல்லது மழைநீரிலோ அறுந்து விழுந்த மின்கம்பிகளைத் தொடவோ, அப்புறப்படுத்தவோ கூடாது. பாதுகாப்பான தூரத்தில் இருந்து மற்றவர்களையும், குறிப்பாகக் குழந்தைகளையும், அருகில் செல்லவிடாமல் எச்சரித்து, உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

திறந்தவெளி, தனித்த மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளின் கீழ் நிற்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டடத்தில் தஞ்சமடைய வேண்டும். கட்டடம் கிடைக்காவிட்டால் தாழ்வான இடத்தில் தஞ்சமடைய வேண்டும். திறந்த ஜன்னல்கள், கிரில்கள் அருகில் நிற்பதையும், இடியின்போது மின்சாதனங்கள் மற்றும் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

தண்ணீர் கசியும் ஈரமான சுவர்கள், ஈரமான சுவிட்சுகள் மற்றும் மின்சாதனங்களை தொடக்கூடாது. ஒருவேளை மின்கசிவு சந்தேகம் ஏற்பட்டால், முடிந்தால் பாதுகாப்பாக மின்சாரத்தைத் துண்டித்து, தகுதியான பணியாளர்களின் உதவியை நாட வேண்டும். குழந்தைகள் மின்சுவிட்சுகள் மற்றும் மின் உபகரணங்கள் அருகில் விளையாடாமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

மின்கம்பிகளில் விழுந்த மரக்கிளைகளை வெட்டவோ, இழுத்து அகற்றவோ கூடாது. மரக்கிளைகள் வழியாக மின்சாரம் பாய்ந்து உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். அவற்றை அகற்ற மின்வாரிய அலுவலர்களை மட்டுமே அணுக வேண்டும்.

மின்கம்பங்கள் மற்றும் ஸ்டே கம்பிகளில் கால்நடைகளைக் கட்டுதல், துணிகளை உலர்த்துதல், விளம்பரப் பலகைகள் அல்லது பந்தல்களுக்கு ஆதரவாக பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். மின்கம்பிகளுக்குக் கீழே கால்நடைகளை கட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.

வீடுகளில் மின்கசிவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க, தகுதியான மின்சாரப் பணியாளர்களின் உதவியுடன் RCCB (Residual Current Circuit Breaker) பொருத்த வேண்டும். வீட்டின் மின்வயரிங் மற்றும் பாதுகாப்புக் கருவிகளை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். RCCB மட்டும் முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்யாது; முறையான மின்காப்பும் (Insulation)அவசியம்.

மின் பாதை அருகில் செடி, கொடி, மரங்களை நட வேண்டாம். மின் வயரில் செடிகொடிகள், மரக்கிளைகள் பட்டிருந்தால் அதை தன்னிசையாக அகற்றாமல். மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மின்தடை, அறுந்த மின்கம்பிகள், மின்கசிவு மற்றும் மின்சாரக் கட்டமைப்பு பாதிப்புகள் தொடர்பான புகார்கள் மற்றும் அவசர உதவிக்கு, அருகில் உள்ள மின்வாரிய அலுவலகம் அல்லது மின்னகம்; மின்நுகர்வோர் சேவை மையத்தின் 94987 94987 என்ற எண்ணை அழைத்தோ அல்லது வாட்ஸ்அப் வாயிலாகவே தொடர்புகொள்ளலாம்.

மின்சாரத்தை மிகவும் கவனமாகப் பயன்படுத்தி மின் விபத்துகளைத் தவிா்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
அச்சச்சோ! மழைக்காலத்தில் ஷாக் அடிப்பதற்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மின் பாதுகாப்பு
logo
Kalki Online
kalkionline.com