

அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ஆண்டுதோறும் அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்வது வழக்கம்.
அந்தவகையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் டெல்டா மற்றும் கடலோர மாவட்ட கலெக்டர்கள் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.
நிவாரண மையங்களில் மின்சாரம், குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை, சுகாதாரத்துறை, மின்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பேரிடர் நிகழ்ந்தால் அதை சமாளிக்க தேவையான மீட்பு உபகரணங்கள் மற்றும் மீட்பு பணியாளர்களை தயார் நிலையில் வைத்தல், பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்படும் இடங்களில் முன்கூட்டியே மீட்பு படையினரை பணி அமர்த்துதல், நிவாரண மையங்களில் மின்சாரம், குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்தல் உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக நீர்நிலைகளை தூர்வாருதல், ஆகாய தாமரை செடி மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை விரைவுபடுத்துதல், சேதம் அடைந்த மின்கம்பங்கள், மின்கோபுரங்களை உடனடியாக சீரமைத்தல் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது குறித்தும் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தின் வாயிலாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.