தற்போது 2024 ஆம் ஆண்டு முடிவடையும் நேரம் வந்துவிட்டதால், அனைவரும் நாஸ்டராடாமசை தேட துவங்கி விட்டனர். இப்போது அனைவரின் பார்வையும் 2025 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் செல்கிறது.1555 ஆம் ஆண்டு அவர் எழுதிய புத்தகமான லெஸ் ப்ரொபிடிஸ் (தி ப்ரோபீசீஸ்) புத்தகத்திற்காக அவர் மிகவும் பிரபலமானவர். இதில் 942 கவிதை உள்ளன. அவை உலகளாவிய நிகழ்வுகளுடன் ஒத்துப் போகின்றன.
15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜோதிட வல்லுனரான நாஸ்டர்டாமஸ் கணிப்புகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு பேரழிவின் போதும் உடனடியாக அனைவரும் தேடுவது நாஸ்டர்டாமஸ் ஏதேனும் சொல்லி இருக்கிறாரா என்பது தான்.
பூமியுடன் சிறுகோள் மோதல்:
2025 ஆம் ஆண்டு துவங்கு முன்னர் பலவித எச்சரிக்கைகள் கொடுக்கப்படுகின்றன.
2025 ஆம் ஆண்டில் பூமியுடன் ஒரு மாபெரும் சிறுகோள் மோதும் அல்லது நெருங்கி வரும் என்று நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். இதனால் பல உயிர்கள் அழியக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவரது கணிப்பின் படி அது சிறு கோள் அல்லது செயற்கைக் கோளாக கூட இருக்கலாம். செயற்கை கோள் அவ்வாறு விழ்ந்தால் பெரிய ஆபத்து இருக்காது. சிறு கோள்கள் அவ்வப்போது பூமியை பயமுறுத்துவது அடிக்கடி நடக்க கூடியதாக உள்ளன. ஆயினும் வரலாற்றுக் காலத்தில் இருந்தே மற்றக் கோள்களினால் பெரிய அழிவு பூமியில் ஏற்படவில்லை.
ரஷ்யா - உக்ரைன் போர்:
நாஸ்டர்டாமஸ் புத்தகத்தில் எழுதியுள்ள கவிதைகளில் ஆராயும் போது 2025 ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போரானது இரு புறமும் வெற்றி தோல்வி இன்றி நீண்ட காலம் நடக்கும் என்று முன்பே அவர் குறிப்பிட்டு இருந்தார். இதன் முடிவு இரண்டு நாடுகளும் தானாக முன்வந்து போரினை நிறுத்தும், அதற்கு காரணம் எதுவும் இருக்காது. இரண்டு நாடுகளும் போரில் களைப்படைந்து விட்டு விடுவார்கள் என கூறப்பட்டுள்ளது. கிட்ட தட்ட ரஷ்யா உக்ரைன் போர் முடிவு கட்டத்திற்கு வந்து விட்டது.
துருக்கி - பிரான்ஸ் மோதல்:
அடுத்ததாக, "நீண்ட யுத்தத்தின் மூலம் அனைத்து இராணுவமும் சோர்வடைந்தன, அதனால் அவர்கள் வீரர்களுக்கு பணம் கிடைக்கவில்லை; தங்கம் அல்லது வெள்ளிக்கு பதிலாக, அவர்கள் தோல், காலிக் பித்தளை மற்றும் சந்திரனின் பிறை அடையாளம் ஆகியவற்றை நாணயமாக மாற்றுவார்கள் " என்று நாஸ்டர்டாமஸ் எழுதியுள்ளார்.
"காலிக் பித்தளை" மற்றும் "நிலவின் அடையாளம்" என்ற குறிப்பு பிரான்சும் துருக்கியும் மோதலில் ஈடுபடக்கூடும் என்று பலரும் கணிக்க தொடங்கியுள்ளனர்.
பிளேக் போன்ற நோய்:
தொடர்ச்சியான போர்களினால் முந்தைய நூற்றாண்டுகளில் வந்த கொடிய நோயான பிளேக் போன்று ஒரு நோய் இங்கிலாந்தில் உருவாகி உலகமெங்கும் பரவும் என்று நாஸ்டர்டாமஸ் எழுதியுள்ளார். அதுவும் புத்தாண்டை தொடர்ந்து இந்நோய் பரவக் கூடும். இதே கணிப்பை இன்னொரு புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வாங்காவும் கணித்துள்ளதால், அறிந்தவர்கள் பீதியில் உள்ளனர்.
பிரேசிலில் இயற்கை பேரழிவுகள்:
தென் அமெரிக்க நாடான பிரேசிலில், பெரு மழை பெய்து வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தும் என்றும், அதிலிருந்து மீண்டு வரும் முன்னரே எரிமலை வெடித்துச் அந்தக் குழம்புகள் தண்ணீரில் கலக்கும்; அந்த விஷம் கலந்த தண்ணீரை மக்கள் குடிக்கும் நிலைக்கு வருவார்கள் என்றும் எழுதியுள்ளார்.
பொதுவாக நாஸ்டர்டாமஸ் எழுதிய கணிப்புகளை எதிர்பார்த்து காத்திருந்த எந்த சம்பவமும் நடைபெற்றது இல்லை. பேரழிவுகள் நடந்த பின்னர் தான் அந்த சம்பவத்தை நாஸ்டர்டாம்ஸ் கவிதைகளோடு ஒப்பிட்டுக் கொள்கின்றனர். அதனால் கவலை தேவையில்லை.