மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை தொடங்கி, ஆனி மாதம் வரை தேவர்களுக்கு பகல் பொழுதாகும். ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவு பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் தேவர்களுக்கு மார்கழி மாதமாகும். தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருப்பதால், மார்கழி மாதம் மனிதர்களுக்கு சிறந்த வழிபாட்டுக்குரிய மாதமாக இருக்கிறது.
‘மாதங்களில் நான் மார்கழி’ என்று பகவான் மகாவிஷ்ணு கூறியுள்ளார். மார்கழி தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார். சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்துவிட்டு பாவை நோன்பு அனுஷ்டித்தால் மனதிற்குப் பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை.
மகத்துவம் நிறைந்த மார்கழி மாதத்தில் உலக நாட்டங்களைக் குறைத்து இறைவனிடம் அவர் திருவடிச் சார்ந்த செயல்பாடுகளிலே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான் வேறெந்த நிகழ்வுகளையும் நடத்தாமல் பார்த்துக் கொண்டார்கள். அதன்படியே மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதேநேரம் இறைவனிடம் மனம் லயிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆண்டாள் இம்மாதம் முழுவதும் விரதம் இருந்துதான் பெருமாளை கணவனாக அடையும் பெருமையைப் பெற்றாள்.
மார்கழியில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு வாசல் தெளிப்பது மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். சூரியனிடமிருந்து வருகிற ஓசோனின் தாக்கம் மார்கழி அதிகாலையில் அதிகமாக இருக்கும். இதனால் அதிகாலையில் வெளியே வருவதால் அந்த காற்றும் கதிரும் உடலை வலிமைப்படுத்தும் என்பதால்தான் அதிகாலை குளியலை முன்னோர்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
மார்கழி மாதத்தில்தான் சிவனுக்காக திருவாதிரை திருவிழா வருகிறது. சிவபெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காக தோழியை எழுப்பச் செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் இடம் பெறுகிறது. சிவனுடைய அடியார்களே கணவனாக வரவேண்டும். அவனோடு சேர்ந்து சிவனை தொழ வேண்டும் என்பதே திருவெம்பாவை நோன்பின் நோக்கம்.
மார்கழி மாதம் அதிகாலை வேளையில் நடைபெறும் வழிபாடுகளில் முக்கியமானது பஜனை. தொன்று தொட்டு நடைபெறும். இந்தச் சம்பிரதாய பஜனை மிகவும் சிறப்பானது. இதில் மிருதங்கம், வயலின், ஹார்மோனியம், கஞ்சிரா, புல்லாங்குழல், மோர்சிங் போன்ற வாத்தியங்கள் இசைக்கப்படும். தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், திருப்புகழ், அபிராமி அந்தாதி, திருவருட்பா மற்றும் சமயப் பெரியவர்களின் கீர்த்தனைகளில் இருந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அடியார்கள் பாடுவார்கள்.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வாசலில் கோலம் போடுவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவதும் நடைபெறும். பசுஞ்சாண உருண்டையில் பூசணி பூவை செருகி கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே நடைபெறும். சில வீடுகளில் அந்த பூ உருண்டையை வரட்டியாக தட்டி சேகரித்து பொங்கலன்று ஆற்றில் விடுவார்கள். மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில்தான் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது. திருப்பாற்கடல் கடையப்பட்டபோது முதலில் ஆலகால விஷம் வந்ததும் சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் மார்கழி மாதத்தில்தான்.
இந்திரனால் பெருமழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது கோவர்தனகிரி மலையை ஸ்ரீகிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களைக் காப்பாற்றியதும் மார்கழி மாதத்தில்தான். மகாவிஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி வருவதும் மார்கழியில்தான்.
பெண்கள் அதிகாலையில் நீராடி பாவை நோன்பு நோற்று பெருமாளை வணங்கி திருப்பாவை பாடுகின்றனர். அந்தக் கண்ணனே தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்பது பல பெண்களின் கனவாக உள்ளது. ஆண்டாளின் திருப்பாவையை பாடுவது மார்கழி மாதத்தில் ஒரு முக்கியமான சிறப்பம்சமாகும். திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டிருக்கிறது நாள் ஒன்றுக்கு ஒரு பாடல் வீதம் மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் திருப்பாவையை மக்கள் பாடி வருகின்றனர். திருப்பதியில் காலையில் வழக்கமாகப் பாடப்படும் சுப்ரபாததிற்குப் பதிலாக மார்கழி மாதம் முழுவதும் காலையில் திருப்பாவை பாடப்படுகிறது.
சிறப்புகள் பல வாய்ந்த மார்கழி மாத விடியற்காலையில் நாமும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாடி பெருமாளையும் சிவனையும் வணங்கி இறைவனின் பேரருளைப் பெறுவோம்.